Oct 7, 2026 - 07:03 PM

முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசமை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன, சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் 10 மில்லியன் ரூபாய் நிதியை 'சிரிலிய சவிய' அமைப்பின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ததன் மூலம் ஊழல் புரிந்தமை, அதற்குத் துணைபோனமை மற்றும் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இவர் இன்று (07) மதியம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.































