Oct 9, 2026 - 01:23 PM

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் (PSTA) புதிய சட்டமூலத்தை முழுமையாக இரத்துச் செய்யக் கோரியும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் இன்று (09) மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய ‘PSTA’ சட்ட வரைவு தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்,
அடிப்படை உரிமைகள் முடக்கம்: இச்சட்டம் மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கில் அமைந்துள்ளது.
பொலிஸாருக்கு இருப்பது போல இராணுவத்திற்கும், கடலோரக் காவல்படைக்கும் பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரம் (சரத்து 19, 20) வழங்கப்படுகின்றது.
நீடித்த தடுப்புக் காவல்: கைது செய்யப்பட்டவரை 48 மணித்தியாலங்களில் நீதிவான் முன் ஆஜர்படுத்துவது அரசியலமைப்பின் 13.2 உறுப்புரைக்கு எதிரானது (சரத்து 26) என்பதோடு, சந்தேகநபரை இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைக்க அதிகாரம் அளிக்கிறது (சரத்து 27).
பொலிஸ் அதிகாரி ஆபத்து என கருதினால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதையோ அல்லது ஊர்வலம் செல்வதையோ தடுக்க முடியும் (சரத்து 51).
போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. PSTA சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
159 ஆசனங்களுடன் மக்கள் அதிபெரும்பான்மை ஆணையைக் கொடுத்துள்ள நிலையில், அரசாங்கம் கொண்டுவரவுள்ள இச்சட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக் குரல்கள் நசுக்கப்படும் என தெரிவித்துள்ள சிவில் அமைப்புகள், PSTA சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.


































