Oct 11, 2026 - 10:32 AM

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஈரி நகரில் அமைந்துள்ள வீடொன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரை மாய்த்து கொண்ட நிலையில் மொத்தம் 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டவாறே வீடொன்றுக்குள் நுழைந்ததாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்கு வெளியே 51 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் குடும்பத்தின் உறவினர் என்பதோடு, மற்றொருவர் குடும்ப நண்பர் ஆவார்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டபோது, வீட்டின் முதல் தளத்தில் 5 வயது மற்றும் 1 வயதுடைய இரு சிறுவர்களும், இரண்டாம் தளத்தில் 24 மற்றும் 44 வயதுடைய இரு பெண்கள், 19 மற்றும் 21 வயதுடைய இரு ஆண்கள் ஆகியோரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்த பெண்களில் ஒருவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதுடன், பலியானவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனைய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஆவர்.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை எனினும், துப்பாக்கிதாரியின் மனநலப் பிரச்சினை இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஈரி நகர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்காணிப்புக் கெமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டின் வெளியே இருந்த இரு பெண்களும் அண்டை வீட்டாரிடம் உதவி கேட்க முயன்றதும், வீட்டிற்குள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வெளியே வந்த துப்பாக்கிதாரி அந்த இருவரையும் சுட்டுக்கொன்றதும் தெரியவந்துள்ளது.


































