Oct 11, 2026 - 11:37 AM

பிரித்தானியாவின் டொன்காஸ்டர் (Doncaster) பகுதியில் அமைந்துள்ள யோர்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலிகள் காப்பகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பிற்பகல் 1:35 அளவில் குறித்த நபர் புலிகள் அடைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, அங்குள்ள புலியொன்று அவரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் புலிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், அது வழக்கம்போல் காப்பகத்திற்குள்ளேயே உள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் கூறினர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் உலாவி வரும் வீடியோ காட்சிகளைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து யோர்க்ஷயர் வனவிலங்கு பூங்கா ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யோர்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில், 2011 ஆம் ஆண்டு 'லேண்ட் ஒஃப் தி டைகர்ஸ்' (Land of the Tigers) பகுதி திறக்கப்பட்டது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விசேட பகுதியில், உலகில் வெறும் 500 மட்டுமே எஞ்சியிருக்கும் அரிய வகை 'அமுர் புலிகள்' (Amur tigers) பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


































