Oct 11, 2026 - 12:07 PM

பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான 'ரன் மல்லி' எனப்படும் சரித் சந்தகெலும் பல்கேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தரவு முறைமைகளின் அடிப்படையில், பல்கேரியப் பாதுகாப்புப் படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை இன்டர்போல் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சு ஊடாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அவரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த சரித் சந்தகெலும், நீண்ட காலமாக துபாயில் வசித்துக்கொண்டு இலங்கையின் போதைப்பொருள் வலைப்பின்னலை இயக்கி வந்துள்ளார்.
இவர் தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான செயற்பாட்டு உறுப்பினராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச சோதனை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகப் போலியான தகவல்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றபோதே அவர் பல்கேரியப் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி கிரிந்த அந்தகவெல்ல கடற்கரைப் பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது ரூ. 30 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்த போதைப்பொருள் தொகையின் உண்மையான உரிமையாளர் துபாயில் தலைமறைவாக உள்ள ரன் மல்லி என்பது பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டது.
துபாயில் இருந்துகொண்டே இலங்கையில் இருப்பவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி, இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொட்டாவ, பன்னிபிட்டிய பகுதியில் வாடகை வீடு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள் கடத்தலால் ஈட்டப்பட்ட 13.9 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த ரன் மல்லியின் மருமகனான தினேஷ் லக்மால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் நிதிப் பரிமாற்றங்களைக் கையாள்வதற்காக ரன் மல்லி அவரைப் பயன்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மகா ராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து கைப்பற்றிய 331 கிலோகிராம் ஹெரோயின் தொகையின் பின்னணியிலும் ரன் மல்லி செயற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவரை நாட்டிற்குப் பொறுப்பேற்றதன் பின்னர், கிரிந்த ஐஸ் கடத்தல், பணமோசடி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.


































