Oct 11, 2026 - 10:52 AM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனி வீட்டுத்திட்டங்கள், சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இந்த வீட்டுத்திட்டங்கள், ஒப்பந்தக்காரர்களின் முறையற்ற முகாமைத்துவம் மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் இதற்காக மீண்டும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, நிர்மாணப் பணிகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து வீட்டுத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 25 தனி வீடுகளின் பணிகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தக்காரர்களிடம் நிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகளைக் கையளிக்கும் நோக்கில், குறித்த வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வீட்டுத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்குத் தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.
அத்துடன், மலையக மக்களின் வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசாங்கத்திற்கும், நிதியுதவி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொழிலாளர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.


































