Oct 11, 2026 - 12:30 PM

மட்டக்களப்பு, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மனிதப் பயன்பாட்டுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து சுகாதாரப் பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரியம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். சிவலக்சன் தலைமையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாலை ஆரம்பமான இந்தச் சோதனையின் போது, அந்த பகுதியில் உள்ள 9 உணவகங்கள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, மனிதப் பயன்பாட்டுக்கு ஒவ்வாத முறையில் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்தல், வர்த்தக நிலைய ஊழியர்களிடம் முறையான மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை, சுகாதாரத்துக்குத் தீங்கான முறையில் உணவுகளை மூடி வைக்காமல் இருத்தல், வர்ணக் காகிதங்களில் உணவுகளைப் பொதி செய்து விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோதக் காரணிகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றங்களுடன் தொடர்புடைய 8 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், மக்களால் உண்ண முடியாத நிலையில் இருந்த அழுகிய மற்றும் காலாவதியான பெருமளவு உணவுப் பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்கள் குறித்து உடனடியாகத் தகவல் வழங்குவதற்காக, மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் தொலைபேசி இலக்கம் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன், குறித்த இலக்கத்தின் ஊடாகத் தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


































