Oct 11, 2026 - 01:32 PM

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 166 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 1,594 குடும்பங்களைச் சேர்ந்த 5,747 பேர் இந்த மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்த நிலை காரணமாக கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சீரற்ற வானிலையால் 4 வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்துவரும் போதிலும், நிலவும் கடும் வறண்ட காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 32 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள குறித்த 32 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 28 பிரிவுகளுக்கு அவசியமான குடிநீர் விநியோகப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்துள்ளது.
இதன்மூலம் 38,547 குடும்பங்களைச் சேர்ந்த 128,977 பேருக்குத் தற்பொழுது குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


































