Oct 11, 2026 - 02:40 PM

நேபாளத்தின் கோர்கா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் இதுவரையில் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் மத்திய பிராந்தியத்திற்குட்பட்ட கோர்கா மாவட்டத்தில் நிலவும் நிலைமை குறித்து, காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வாழும் இலங்கைச் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பான புதிய தகவல்களை இலங்கையர்களுக்குத் தூதரகம் தொடர்ச்சியாக அறிவித்து வருவதாகவும், அப்பகுதிகளுக்கான பயணங்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளையும் தூதரகம் விடுத்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (11) அதிகாலை மீண்டும் கடுமையான வெள்ளப்ருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகப் பல நபர்கள் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், இந்த வெள்ளப் பெருக்கினால் பிரதான நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் பல சேதமடைந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


































