Oct 11, 2026 - 03:28 PM

யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘குவியம் விருதுகள்’ விழா நேற்று (10) சிறப்பாக நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் சினிமாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து, கலைஞர்களின் திறமைகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவில், நாடளாவிய ரீதியில் இருந்து பல்வேறு கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விருது பெற்ற கலைஞர்களுக்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன், அவர்களின் கலைப் பயணம் மேலும் சிறப்புறத் தொடர வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இலங்கைத் தமிழ் சினிமாத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் கலைஞர்களின் திறமைகள் உலகத் தரம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட அமைச்சர், எமது கலைஞர்கள் தமது படைப்பாற்றலின் ஊடாகத் தங்களது திறமைகளை நிரூபித்து வருவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் திரைப்படத் தயாரிப்புக்கு நீண்ட வரலாறு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் தமிழ் இளைஞர்கள் திரைப்படங்களை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட காலங்களை நினைவுகூர்ந்தார்.
அக்காலப்பகுதியில் திரைப்படத் தயாரிப்பாளர்களும் கலைஞர்களும் எதிர்கொண்ட சவால்களைத் தாம் நேரடியாகக் கண்டுள்ளதாகவும், தனது மகனும் அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படமொன்றில் நடித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் இலங்கையில் தமிழ் சினிமாவை வளர்த்தெடுக்க முடியுமா என்ற கேள்வியும் ஏக்கமும் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது உருவாகிவரும் திரைப்படங்களையும் கலைஞர்களின் படைப்பாற்றலையும் பார்க்கும்போது பெருமிதம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, ‘அந்தோனி’ போன்ற திரைப்படங்கள் தம்மைக் கவர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கைத் தமிழ் சினிமாவில் உருவாகும் தரமான படைப்புகள் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் ஒஸ்கார் போன்ற உலகளாவிய விருது மேடைகளிலும் கவனம் பெறும் அளவுக்கு வளர்ச்சியடைய வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். அத்துடன், உள்ளூர் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு நடைபெற்ற ‘குவியம் விருதுகள்’ விழாவில் காணொளிப் பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத் திரைப்படங்கள் மற்றும் முழுநீளத் திரைப்படங்கள் என நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் மொத்தம் 48 விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற கலைஞர்களின் ஆற்றலையும் சாதனைகளையும் பாராட்டிய அமைச்சர், அவர்களின் எதிர்காலக் கலைப் பயணம் மேலும் வெற்றிகரமாக அமையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஐந்தாவது ஆண்டாகவும் ‘குவியம் விருதுகள்’ விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்குத் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த அமைச்சர், இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
உள்ளூர் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் இம்முயற்சிகள் இலங்கைத் தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
விருதுகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கலைஞர்களின் திறமைகளைக் கொண்டாடுவதற்கும் இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்த இவ்விழா, சிறப்பாக நிறைவடைந்தது.


































