Oct 11, 2026 - 04:30 PM

பொதுவாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, வயோதிகம் காரணமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், உயிரிழக்க 24 மணி நேரத்துக்கு முன்பு சில அறிகுறிகள் தென்படும் என்கிறார்கள்.
நோயாளிகளின் இறுதிக் காலத்தில் அவர்களை வலியின்றி மரணிக்க வைக்கும் பல பராமரிப்பு மையங்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
அதுபோன்ற பராமரிப்பு மையங்களில் பல ஆண்டு காலம், சேவையாற்றி வந்த அமெரிக்க செவிலியர் மெக்ஃபெடன் தன்னுடைய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
'அச்சப்பட ஒன்றுமில்லை, திருப்தியான வாழ்வை நிறைவு செய்யும் மரணம்' என்ற பொருளில் அவர் வெளியிட்ட புத்தகத்தில், மரணம் அல்லது உயிரிழப்பு நேரிடுவதற்கு முன்பு ஏற்படும் பயம் போன்ற பல்வேறு விவகாரங்களை அனுபவப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.
தன்னுடைய அனுபவத்தின் மூலம், ஒருவர் மரணிக்க 24 மணி நேரம் இருக்கும் நிலையில் சில அறிகுறிகள் தென்படும். சிலர் இந்த நாளில் மரணம் அடைவேன் என்று மிகச்சரியாக குறிப்பிட்டுச் சொன்னபடி, அவர்கள் மரணமடைந்திருப்பதையும் அவர் கண்டிருக்கிறாராம்.
ஒருவர் தான் இன்று மாலை இறந்துவிடுவேன் என்று சொன்ன நிலையில், அதுபோலவே அவரது மரணம் நிகழ்ந்ததையும் மெக்ஃபெட்டன் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலானோர், தாங்கள் மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்தே இருப்பார்கள், அது தொடர்பான அச்சம் அவர்களைத் தொற்றிக் கொள்வதையும் அவர்கள் அதை வெளிப்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன் என்கிறார்.
மேலும், மரணத்தை தழுவவிருக்கும் பெரும்பாலானோர் ஒரு இரைச்சலை வெளிப்படுத்துவர். அந்த இரைச்சலை, மரணத்தின் இறுதி மூச்சுச் சப்தம் என்று அழைக்கிறார். இது காற்றின் கொப்புளிக்கும் ஒலி என்றும் குறிப்பிடுகிறார்.
மெக்ஃபடன் தனது இறுதிக்காலப் பராமரிப்பு நோயாளிகளிடம் கவனிக்கும் மற்றொரு மாற்றம், சுவாசத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். சுவாசம் பெரும்பாலும் நீண்டு, வழக்கத்தை விட மிகவும் மெதுவாக மாறக்கூடும். இதையும் பெரும்பாலான குடும்பத்தினர் கவனித்திருப்பார்கள். ஆனால் சிலரால் இதனை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால், வழக்கமான மூச்சு வேகம் இறக்கும் நாளுக்கு முன்பு சற்று வேகம் குறைவதைக் காண முடிந்திருக்கிறது என்கிறார்.
மேலும், நோயாளிகளின் கண்கள் அசைவு மந்தமடையும், எதன் மீதும் நிலைக்காமலும் காணப்படலாம். அதாவது, அவர்கள் குறிப்பாக எதையும் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், இந்த நிலையிலும், அவர்களால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்கவும் யார் யார் அருகில் இருக்கிறார்கள் என்பதையும் உணர முடியும் என்று மூன்று அறிகுறிகளை தான் பார்த்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
பெரும்பாலும் மரணத் தறுவாயில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரும் தங்களது அன்பை வெளிப்படுத்துவர், மன்னிப்புக் கேட்பார்கள் என்றும் கூறுகிறது.
இதனுடன் நமது ஊர்களில் இருக்கும் ஒரு வழக்கம், மரணத் தறுவாயில் இருப்பவர்கள், தங்களது குடும்பங்களில் ஏற்கனவே இறந்தவர்கள் தன்னை நேரில் வந்து அல்லது கனவில் வந்து அழைத்ததாக தன்னுடன் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் அனுபவங்களும் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


































