Oct 11, 2026 - 04:06 PM

'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அவர் பல குற்றச் செயல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நபர் விமானப்படையில் இருந்து தப்பிச் சென்ற முதன்மை ஒப்பந்த துப்பாக்கிதாரி என்றும், வெளிநாடொன்றில் தலைமறைவாக இருக்கும் "தெஹிவளை செண்டோ" எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவரின் பிரதான துப்பாக்கிதாரி என்றும் தெரியவந்துள்ளது.
கொட்டாவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்க திடீர் வீதித் தடை பரிசோதனையின் போது, 10,500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில், அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோதே, இவர் இதற்கு முன்னர் தெஹிவளை மற்றும் கல்கிசை பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு மனிதப் படுகொலைகள் தொடர்பாக நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி பொரலஸ்கமுவ மாலினி புலத்சிங்கள மாவத்தையில் துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட படுகொலையின் பிரதான துப்பாக்கிதாரியும் இவரே என்பதும் தெரியவந்துள்ளது.
ஹோமாகம குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரிடமிருந்த கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வெளிநாடொன்றில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு அமைய, எதிர்வரும் சில நாட்களில் கல்கிசை பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த பல மனிதப் படுகொலை திட்டங்கள் இந்த கைதின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


































