Oct 11, 2026 - 02:01 PM

இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கக் கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'தெரண - ரிட்ஸ்பரி தாய்நாட்டிற்கு ஒரு வீரன் - நாட்டிற்கு ஒரு சொத்து' திட்டத்தின் தொடர்ச்சியாக 'தாய்நாட்டிற்கு ஒரு வீரன் விளையாட்டு எழுச்சி' திட்டம் இன்று (11) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.
தெரண ஊடக வலையமைப்பின் 21 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விசேட திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த 'விளையாட்டு எழுச்சி' திட்டத்தின் கீழ், தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய 21 பாடசாலைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி தனது ஒளிபரப்புச் சேவையை ஆரம்பித்த தெரண தொலைக்காட்சிக்கு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த ஆண்டு இடம்பெற்ற தெரணவின் 20 ஆவது ஆண்டு நிறைவின் போது ஆரம்பிக்கப்பட்ட 'தாய்நாட்டிற்கு ஒரு வீரன் - நாட்டிற்கு ஒரு சொத்து' திட்டத்தின் மூலம், நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 100 மீற்றர், 400 மீற்றர், 800 மீற்றர் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் ஈட்டி எறிதல் வீரர்களை கண்டறிந்து அவர்களை ஒலிம்பிக் போட்டித் தொடர் வரை கொண்டு செல்வதற்கான பயிற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


































