Oct 15, 2026 - 11:14 AM

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவத்தகம பகுதியில் இணையம் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை இட்டுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிப் பண மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (14) இரவு மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம, மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார்.
குறித்த சந்தேகநபர் முகநூல் வணிகக் கணக்கு மூலம் வாகனங்களை விற்பனை செய்து தருவதாகவும், அதற்காக ஒரு வாரத்திற்கு 5,000 ரூபாயும், இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாயும் செலுத்துமாறு தொலைபேசி ஊடாகக் கோரியுள்ளார்.
அதன் பின்னர் பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரங்களை வெளியிடாமல், குற்றவியல் நம்பிக்கை துரோகம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
































