Oct 16, 2026 - 02:49 PM

தேசிய சேமிப்பு வங்கியினால் ‘சிரிலிய சவிய’அமைப்பிற்கு 10 மில்லியன் ரூபா பணத்தை வழங்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரந்தி ராஜபக்ஷவின் மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரின் பாதுகாப்பு கடிதத்துடன் (Covering letter) அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிரந்தி ராஜபக்ஷவின் நோய் நிலைமை குறித்த தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த நீதவான், அவருக்கு பைபாஸ் (Bypass) அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன்போது, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குறித்த மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் கருத்துக்களை முன்வைக்கத் தனக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
இதற்கமைய, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
































