Oct 16, 2026 - 03:00 PM

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் புத்தசாசன அமைச்சுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இதற்கமைய, போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுடன் புத்தசாசன அமைச்சு பேச்சுவார்த்தை ஒன்றை வழங்கியுள்ளதுடன், அதில் பிரதிநிதிகளாக நான்கு தேரர்கள் பங்கேற்றுள்ளனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ‘காவி உடைக்கு நீதி - சுதந்திர சுதந்திர நடைபயணம்’ கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடைபயணத்தில் இணைந்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வருகை தந்ததுடன், ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதில் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதன்படி, இரவையும் அதே இடத்தில் கழித்ததுடன், காலி வீதிக்கு அருகில் தற்காலிக கூடாரங்களை அமைத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனிடையே, ஜனாதிபதி செயலகம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதி என்பதால், அதற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம் என பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் பொலிஸாரால் அந்த நீதிமன்ற உத்தரவு போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
































