Oct 16, 2026 - 07:15 PM

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள் குழுவொன்று கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முகாமமைத்து தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (16) நண்பகல் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தங்கியிருந்த தேரர்கள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாக விஜயம் செய்தனர்.
அங்கு அந்த அமைச்சின் செயலாளருடன் சில தேரர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகத் தெரிவித்து, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாக பலங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் காவி ஆடைக்கு நீதி - சுதந்திர நடைபயணம் கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடைபயணத்தில் இணைந்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வருகை தந்ததுடன், ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதில் வழங்கப்பட வேண்டும் என மகா சங்கத்தினர் அங்கு குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஜனாதிபதியின் செயலாளரும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் வருகை தந்த போதிலும், சரியான தீர்வு கிடைக்காமையினால் அக்குழுவினர் அங்கு தங்கியிருக்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் குறித்த தேரர்கள் அந்த இடத்தில் தற்காலிக கூடாரங்களை அமைக்க முற்பட்ட போது, பொலிஸாருடன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தங்கியிருக்கும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்ததுடன், அந்தத் தீர்ப்பை இன்று நண்பகல் அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினருக்கு அறிவித்தனர்.
பொலிஸார் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தங்கியிருந்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் பின்னர் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.
































