Oct 16, 2026 - 10:15 PM

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் ஆட்சியினை மாற்றி நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரகீத் எக்னெலிகொட தன்னிடம் கூறியதாக எல்.டி.டி.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான முரளி என்பவர் இன்று (16) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் எக்னெலிகொடவும் தானும் சகோதரர்களைப் போல் பழகியதாகவும், தங்களது இந்த நட்பு தமிழ்செல்வன் உள்ளிட்ட அமைப்பின் உயர் தலைவர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும் சாட்சியாளர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
தலைமை நீதிபதி நயனா செனவிரத்ன, நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோரைக் கொண்ட நிரந்தர நீதாய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இங்கு முறைப்பாட்டாளரின் சாட்சியாளராக சாட்சியமளிப்பதற்காக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே இன்று கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியங்களை வழிநடத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, சுரேஷ் சலே ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சபையின் பணிப்பாளராகப் பணியாற்றிய காலம் எதுவென வினவினார்.
2012 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டின் இறுதி வரை என சலே அதற்குப் பதிலளித்தார்.
பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், கிரிதலே கவசப் படைப் புலனாய்வுப் படையணி பற்றித் தெரியுமா என வினவினார்.
அதற்குப் பதிலளித்த சலே, மூன்று நான்கு முறை அங்கு சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைக்குரிய தகவல்களை வழங்கியது நினைவிருக்கிறதா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கேட்டார்.
விசாரணை ஒன்று இடம்பெற்றது நினைவிருப்பதாகவும், அது தொடர்பான தொலைபேசித் தரவு அறிக்கைகளை வழங்கியதாகவும் சாட்சியாளரான சலே தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளின் போது சலே பின்வருமாறு குறிப்பிட்டார்:
"ஐயா, எனது 38 கால சேவைக்காலத்தில் நான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். பல வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளேன். பல ஆவணங்களை வழங்கியுள்ளேன். இச்சம்பவம் தொடர்பாகவும் விசாரணைக் குழு (Court of Inquiry) ஒன்று அமைக்கப்பட்டது. அதற்குரிய தகவல்களும் கையளிக்கப்பட்டன. ஆனால் தற்போது இச்சம்பவம் நடந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால், வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைச் சரியாகப் பார்க்காமல் கூற முடியாது." என்றார்.
சாட்சியமளித்த பின்னர் சுரேஷ் சலே மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, இவ்வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பின் 4வது சாட்சியாளரான சுமத்திபால சுரேஷ் குமார் என்ற முரளியிடம் 9வது பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன இன்றைக்கும் குறுக்குக் கேள்விகளை எழுப்பினார்.
"நீங்கள் எல்.டி.டி.ஈ அமைப்பின் உறுப்பினராக இருந்த காலத்தில் பிரகீத் எக்னெலிகொட என்ற நபருடன் சகோதரரைப் போல் பழகிய காலம் ஒன்று இருந்தது தானே?"
அதற்கு சாட்சியாளர், "ஆம் ஐயா" எனப் பதிலளித்தார்.
"அப்போது அவருடன் யுத்த களத்தில் உங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டீர்கள் தானே?" என சட்டத்தரணி மீண்டும் வினவினார்.
அதற்கும் சாட்சியாளர் 'ஆம்' எனப் பதிலளித்தார்.
பின்னர் சட்டத்தரணி, "பிரகீத் எக்னெலிகொடவுடனான தொடர்பு குறித்து எல்.டி.டி.ஈ அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் சொன்னீர்களா?" எனக் கேட்டார்.
சாட்சியாளரான முரளி அதற்கு 'இல்லை' எனப் பதிலளித்தார்.
மீண்டும் கேள்வியெழுப்பிய சட்டத்தரணி, "எக்னெலிகொடவுடனான தொடர்பு பற்றி தமிழ்செல்வன் மற்றும் எல்.டி.டி.ஈ அமைப்பின் வெடிபொருள் பிரிவின் பிரதானியாக இருந்த ஞானவேலிடம் கூறியிருந்தீர்களா?" எனக் கேட்டார்.
அவர்கள் இருவரிடமும் அது பற்றிக் கூறியிருந்ததாக சாட்சியாளர் தெரிவித்தார்.
"பொட்டு அம்மான்தானே கொலைகாரப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகவும் தற்கொலை குண்டுதாரிகளை இயக்கியவராகவும் இருந்தார்?" என சட்டத்தரணி வினவியபோது, "அது பற்றி எனக்குத் தெரியாது" என சாட்சியாளர் பதிலளித்தார்.
மீண்டும் கேள்வியெழுப்பிய சட்டத்தரணி அசித் சிறிவர்தன, "நீங்கள் எக்னெலிகொடவுடன் வைத்திருந்த சகோதர பிணைப்பு மற்றும் நட்பு பற்றி பொட்டு அம்மான் என்பவரிடம் கூறியிருந்தீர்களா?" எனக் கேட்டார்.
அதற்கு சாட்சியாளரான சுரேஷ் குமார் என்ற முரளி பதிலளித்தார்.
"நீங்கள் தம்புள்ளை, ஹபரணை தோட்டம் என்ற இடத்தில் எக்னெலிகொடவைச் சந்தித்தபோது, அவர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அப்போதைய நாட்டின் தலைவரைக் கொலை செய்ய வேண்டும் என உங்களிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்திருந்தீர்கள் அல்லவா?" என சட்டத்தரணி மீண்டும் வினவினார்.
அதற்கு சாட்சியாளர் 'ஆம்' எனப் பதிலளித்தபோது, "அப்போதைய நாட்டின் தலைவராக இருந்தது மஹிந்த ராஜபக்ஷதானே?" எனச் சட்டத்தரணி கேட்டார்.
சாட்சியாளரான முரளி 'ஆம்' எனப் பதிலளித்தார்.
எக்னெலிகொடவுடனான தொடர்பு பற்றி பொட்டு அம்மானிடம் கூறியது, எக்னெலிகொட அந்தப் பேச்சைப் பேசுவதற்கு முன்பா? அல்லது பின்பா? என சட்டத்தரணி மீண்டும் வினவ, அதற்கு 'முன்பு' என சாட்சியாளர் பதிலளித்தார்.
இதன் பின்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா அவரிடம் கேள்விகளை எழுப்பினார்.
"நீங்கள் ராணுவத்திடம் சரணடைவதற்கு முன்னர் எல்.டி.டி.ஈ புலனாய்வுப் பிரிவினருடன் சென்று ஹபரணையில் எக்னெலிகொடவைச் சந்தித்ததாக இன்று பிரதிவாதித் தரப்பு குறுக்குக் கேள்வி கேட்கும்போது கூறினீர்கள். அங்கு நாட்டின் தலைவரைக் கொலை செய்வது பற்றி எக்னெலிகொட கூறியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு முன்னர் ஒரு நாளில் முதலாவது பிரதிவாதி சார்பாக இச்சம்பவம் பற்றிக் கேட்டபோது, அது ஒரு உதாரணமாகக் கூறப்பட்ட ஒன்று என்றுதானே சொன்னீர்கள். அதை விளக்க முடியுமா?"
அதற்கு சாட்சியாளரான சுரேஷ் குமார் என்ற முரளி பின்வருமாறு கூறினார்:
"நானும், நாதன் ஐயாவும், எக்னெலிகொட ஐயாவும் ஹபரணை தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். நானும் நாதன் ஐயாவும் இப்போது போர் முடிந்துவிட்டதால் சுதந்திரமாக வாழலாம் என்று சொன்னோம். அப்போது எக்னெலிகொட, போர் முடிந்தாலும் அனைத்துப் பிரச்சினைகளும் அப்படியேதான் இருக்கின்றன என்றார். அதற்கு நானும் நாதனும், அவற்றை முடிவுக்குக் கொண்டுவரவோ மாற்றவோ முடியாது, இந்த ஆட்சி இன்னும் 20 ஆண்டுகளாவது நீடிக்கும் என்று சொன்னோம். அப்போது எக்னெலிகொட, இன்று நினைத்தால் இன்றே மாற்ற முடியும் என்றார். நாங்கள் எப்படி என்று கேட்டோம். ஜனாதிபதி விமானத்தில் (Flight) போகிறார், அதற்கு ஒரு ஏவுகணையை அடித்தால் எல்லாம் மாறிவிடும் என்று அவர் சொன்னார்" என்றார்.
































