Oct 16, 2026 - 09:45 PM

நில்வலா கங்கை ஆற்றுப் படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் ஒக்டோபர் 18 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நில்வலா கங்கை ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, ஆற்றின் நீர்மானிகளின் நீர் மட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நிலவலா கங்கையின் வான்பாயும் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
































