Oct 17, 2026 - 03:48 PM

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 2027ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு பருவங்களுக்குப் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்ட அவர், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் இந்தப் பதவிலிருந்து விடைபெற்றுள்ளார்.
முன்னதாக, 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தனது முதல் கட்டப் பயிற்றுவிப்பாளர் பதவி காலத்தில் மும்பை அணி 3 ஐபிஎல் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது விலகல் குறித்துப் பேசிய மஹேல ஜயவர்தன, "மும்பை இந்தியன்ஸ் அணி எனது பயணத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிகச் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்ந்துள்ளது.
அணி நிர்வாகி நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் எனது இதயத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மஹேலவின் சிறப்பான பங்களிப்பிற்கு அணியின் உரிமையாளர் நீதா அம்பானியும் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2026 ஐபிஎல் பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் அணிக்கு இளம்பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டுவருவது என ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.
இதனையடுத்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து மஹேல விலகியுள்ள நிலையில், நவம்பர் 15ஆம் திகதிக்குள் வீரர்களைத் தக்கவைக்கும் (Retention) கெடு முடிவடையவுள்ளதால், புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மும்பை அணி தீவிரமாக இறங்கியுள்ளது.
































