Oct 17, 2026 - 04:27 PM

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த 'தேனிசை தென்றல்' தேவா (76) இன்று காலமானார்.
அவருக்குத் திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
'மனசுக்கேத்த மகராஜா' படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான அவர், 1990ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, குறிப்பாக பல கானா பாடல்களை உருவாக்கி இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் ஆவார்.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தேவாவின் உடலுக்கு நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதேநேரம், நடிகர்களான ரஜினிகாந்த, கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழ் இசை உலகிற்கு அவர் ஆற்றிய பெருமைமிக்க சேவையைப் போற்றும் வகையில், தேவாவின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கமைய, அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ள நிலையில், அங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஒரு மணியளவில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
































