Oct 17, 2026 - 04:00 PM

நாடு முழுவதும் இன்று (17) காலை ஏற்பட்ட திடீர் மின் தடை, இன்று மாலைக்குள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6.30 அளவில் முழுமையான மின் விநியோகக் கட்டமைப்பையும் மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும் என அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாகப் பரவும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அனல் மின் நிலையம் மாத்திரம் உரிய முறையின்படி தற்காலிகமாகச் செயற்பாடுகளிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே மின் விநியோகம் மீள வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், மாலை நேரமாகும் போது முழு மின்சாரக் கட்டமைப்பும் முற்றிலுமாகச் சீரமைக்கப்படும் என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
































