Oct 18, 2026 - 11:00 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து, அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காத்தான்குடி பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் விற்கப்பட்ட மோதிரம், பெண்டன்ட், காதணி உள்ளிட்ட நகைகளும், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய தங்க ஆபரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
கைதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
































