Oct 18, 2026 - 11:45 AM

வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, பெரேரா மாவத்தையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 'பியுமி' என அழைக்கப்படும் பெண் ஒருவர், சுமார் 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை கோட்ட நச்சுப் போதைப்பொருள் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் கடந்த 16ஆம் திகதி வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 274 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இவர் நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான 'தெமட்டகொடை சமிந்தவின்' பிரதான கூட்டாளியான 'தெமட்டகொட இசுரு' என்பவரின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை வெல்லம்பிட்டிப் பகுதியில் முன்னெடுத்துச் சென்ற பிரதான உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நேற்று புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில், வெல்லம்பிட்டிப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































