Oct 18, 2026 - 12:42 PM

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படம் வெளியான முதல் 3 நாட்களுக்குள்ளேயே உலகளவில் 317 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இப்படத்தில், 'டைகர் முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 317.15 கோடியைக் கடந்துள்ளது. இதில் வெளிநாட்டுச் சந்தைகளின் பங்களிப்பு மட்டும் ரூ. 147.50 கோடியாகும்.
இந்தியாவில் படத்தின் மொத்த நிகர வசூல் ரூ. 144.60 கோடியை எட்டியுள்ளது. நேற்று மாத்திரம் இப்படம் இந்தியாவில் ரூ. 47.80 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 28.8% அதிகமாகும்.
'ஜெயிலர் 2' படத்தின் இந்த அசுர வளர்ச்சியின் மூலம், ரஜினிகாந்தின் முந்தைய வசூல் சாதனைகளான 'கபாலி' (சுமார் ரூ. 295 கோடி) மற்றும் 'எந்திரன்' (சுமார் ரூ. 290 கோடி) ஆகிய படங்களின் மொத்த உலகளாவிய வசூல் சாதனைகளை இந்தப் படம் முந்தியுள்ளது.
இதன் மூலம் ரஜினியின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய நான்காவது திரைப்படமாக இது பதிவாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ரஜினியின் '2.0' (ரூ. 668 - 675 கோடி) முதலிடத்திலும், 'ஜெயிலர்' (ரூ. 605 - 630 கோடி) இரண்டாம் இடத்திலும், 'கூலி' (ரூ. 516.7 - 548 கோடி) மூன்றாம் இடத்திலும் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
































