Oct 20, 2026 - 10:13 AM
By மலையக நிருபர் சதீஸ்குமார்
By மலையக நிருபர் சதீஸ்குமார்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக, வெகு விரைவில் தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெல்மடுலை, தேவாலேகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ரில்ஹேன தோட்டம், பாலுகம்பல பிரிவில் கடந்த 15 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் தோட்டக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று தோட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புகளைப் பிரதி அமைச்சர் கடந்த 18 ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,
குறித்த தோட்டப் பகுதியில் ஒரு வீடு முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயினால் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்குவது தொடர்பிலும் பிரதி அமைச்சர் என்ற ரீதியில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகளையும் குறித்த பகுதிக்கு அழைத்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், அதன் அறிக்கை கிடைத்த பின்னர் வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதி அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது, தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைநிறைகளையும் பிரதி அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
































