Oct 21, 2026 - 04:28 PM

மொரட்டுவ, சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று (20) இரவு அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில காலமாக ஒரு குற்றக் கும்பலிடம் இருந்து அவருக்கு மரண அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர், டி-56 ரக துப்பாக்கியால் உணவக உரிமையாளரை நோக்கி பலமுறை சுட்டார்.
பின்னர், அந்த நபர் தான் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் செல்லும் வழியில், பிலியந்தல பகுதியில் அந்த காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
காரில் இருந்து இறங்கிய அந்த நபர், வானத்தை நோக்கிச் சுட்டதோடு, ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அச்சுறுத்தி, அந்த மோட்டார் சைக்கிளைக் கடத்திச் சென்று, காரின் ஓட்டுநருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவக உரிமையாளர், உணவகத்திற்குள்ளேயே உயிரிழந்தார். 49 வயதான லசந்த குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உணவகத்தில் உணவு வாங்க வந்த ஒரு பெண்ணும் சுடப்பட்டு காயமடைந்தார்.
இதற்கிடையில், 2020 மே 19 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் குழுவால் இந்த உணவகம் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
































