Oct 22, 2026 - 09:51 PM

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி பிடித்து வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ஹரி புரூக் 116 பந்துகளில் 202 ஓட்டங்களையும், வில் ஜாக்ஸ் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், ஜோ ரூட் 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
430 ஓட்டங்கள் என்ற மிகக் கடினமான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலேயே குசல் மெண்டிஸ் (0) மற்றும் கமிந்து மெண்டிஸ் (18) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், பவன் ரத்நாயக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அதிரடி ஆட்டம் போட்டியை இலங்கை பக்கம் திருப்பியது. பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 130 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 83 பந்துகளில் 97 ஓட்டங்களையும் குவித்தனர்.
தொடர்ந்து வந்த தசுன் ஷானக்க 50 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய ஜனித் லியனகே வெறும் 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி, ஒரு பந்து மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் இலங்கை அணி பதிவு செய்த இந்த வெற்றியானது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான இலக்குத் துரத்தலாகும் (Run chase).
இதற்கு முன்பாக, கடந்த 2006 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த தென்னாப்பிரிக்கா அணியே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
































