Oct 22, 2026 - 10:28 PM

இராஜதந்திர ரீதியிலான தோல்விகள் மற்றும் மூலோபாய தொலைநோக்கின்மை காரணமாக இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு பலவீனமடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, நாட்டின் இராஜதந்திரத் தரநிலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன், தொழில்முறை அரச தந்திரத்திற்குப் பதிலாக அனுபவமற்ற அணுகுமுறையையே அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் சாடினார்.
தாய்லாந்து துணைப் பிரதமரின் இலங்கைகான விஜயத்தை அரசாங்கம் கையாண்ட விதம் தாய்லாந்து நாட்டிற்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று குற்றம் சாட்டிய அவர், அவர் தனிப்பட்ட விஜயமாகவே வருகை தந்தார் என்றும் கோரப்பட்டவாறு உபசரிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு அளித்த விளக்கத்தையும் விமர்சித்தார்.
ஒரு பிராந்தியக் கூட்டு நாட்டின் பதவியில் உள்ள துணைப் பிரதமரை வெறும் தனிப்பட்ட பிரஜையாக நடத்தக் கூடாது என்றும், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் இராஜதந்திர உறவுகளைப் பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ரைசினா உச்சிமாநாட்டில் (Raisina Dialogue) கடல்சார் பாதுகாப்பு குறித்து விடயம்சார் அமைச்சருக்குப் போதிய தகவல்களை வழங்கத் தவறியமை மற்றும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் இலங்கையின் பிரதிநிதித்துவம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
வரலாற்று ரீதியாக இலங்கை பரஸ்பர நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் உலக விவகாரங்கள் பற்றிய ஆழமான புரிதலின் மூலம் வலுவான சர்வதேச உறவுகளைப் பேணி வந்தது என்றும், அது எந்தவொரு நாட்டிலும் தங்கி நிற்காமல் முக்கிய வல்லரசுகளுடன் சுதந்திரமாக ஈடுபட வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் இராஜதந்திர நற்பெயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, வெளிப்படைத்தன்மையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் மூலோபாயப் புரிதலுடனும் வெளியுறவுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
































