Oct 26, 2026 - 02:23 PM

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவது தொடர்பில் முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 696.96 m/MSL (கடல் மட்டத்திலிருந்து உயரம்) ஆக நிலவுவதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் 78.71 சதவீதமாகும்.
இதற்கமைய, நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டமான 703.00 m/MSL ஐ அடைவதற்கு இன்னும் 36.381 MCM (மில்லியன் கன மீற்றர்) அளவு நீருக்கான கொள்ளளவு எஞ்சியுள்ளது.
இருப்பினும், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்த்தேக்கத்திற்கு நீர் வரும் வேகம் அதிகரித்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் நீர்த்தேக்கம் வான்பாயும் நிலையை அடையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கொத்மலை ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளான நுகவெல, ரிவர்சைட், மாவத்துர ஆகிய பிரதேசங்களிலும், மகாவலி கங்கையின் உலப்பனைப் பகுதியிலிருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரை வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு அறிவித்தல் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































