Oct 29, 2026 - 04:03 PM

நகர்ப்புற வாழ்க்கை மற்றும் முதலீட்டு சொத்துகளில் அதிகரித்துவரும் ஈடுபாட்டை
இலங்கையின் ரியல் எஸ்டேட் சந்தை எதிர்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டில் 20 வருட பூர்த்தியை
எய்தவுள்ள, லங்கா புரொப்பர்டி வெப் ஸ்தாபகர் எனும் வகையில், சொத்துகள் சந்தையின்
வளர்ச்சியை சுமார் 20 வருட காலமாக அவதானித்துள்ளேன். எமது கட்டமைப்புகளான
LankaPropertyWeb.com மற்றும் House.lk ஆகியன சகாயமான வீடமைப்புகள் முதல் உயர்
தரமான அடுக்குமாடித் தொடர்மனைகள் வரை வெவ்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன.
கொழும்பு நகரம் விரிவாக்கம் அடைந்து வரும் சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின்
முன்னுரிமைகள் மாறிவரும் சூழலிலும், அமைவிடம், வாழ்க்கை முறை, முதலீட்டுச்
சாத்தியக்கூறுகள் மற்றும் அபிவிருத்தியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும்
தேவைகளுடன், குடியிருப்புச் சூழலில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக முக்கியமான அங்கமாக
மாறி வருகின்றன என்பது ஒரு தெளிவான போக்காக உள்ளது. உள்நாட்டு வாடிக்கையாளர்கள்
மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் தேவையினாலும், 12 மாத
காலப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையில் பதிவாகியுள்ள 15% விலைமதிப்பு
உயர்வு இவ்வாறான அதிகரித்து வரும் தேவையைப் பிரதிபலிக்கின்றது.
எதிர்கால வளர்ச்சிக்காக இலங்கையினுள் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க
வேண்டியது அவசியமாகும். இதில் எமது புவியியல் அமைவிடம் மிகவும் வலுவான சாதகமான
அம்சங்களில் ஒன்றாக திகழ்கின்றது. பிரதான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துப்
பாதைகளுக்கான அணுகலைக் கொண்டு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள எம்நாடு,
குடியிருப்பு தளமொன்றை எதிர்பார்க்கும் நபர்களுக்கும், பிராந்திய அளவிலான இருப்பைத்
தேடும் வர்த்தக நிறுவனங்களுக்கும் உகந்த மையமாக அமையும் சாத்தியக்கூறைக்
கொண்டுள்ளது. இவ்வாய்ப்புகள் வெறும் சொத்துரிமையோடு மட்டும் நின்றுவிடாமல்,
உலகளாவிய இணைப்புத் திறன் மற்றும் வசதியான நேர வலயம் ஆகியவற்றின் நன்மைகளைப்
பெறும் வகையில், Back-office செயற்பாடுகள், தகவல் தொழில்நுட்ப Outsourcing சேவைகள்
மற்றும் ஏனைய வணிகச் செயற்பாடுகள் வரை விரிவடையும். இதனைச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அத்தகைய ஒரு திட்டமாக கொழும்பு துறைமுக நகரம்
அமைந்திருப்பதுடன், இது பரந்த சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு சமிக்ஞையாக
அமையக்கூடிய ஆற்றலையும் கொண்டுள்ளது. எனினும், முதலீடுகளை ஈர்ப்பதில் இதன்
நீண்டகால வெற்றியானது, வாக்குறுதிகளுக்கு ஏற்ற நம்பகமான மற்றும் வெளிப்படைத்தன்மை
கொண்ட செயற்பாட்டுச் சூழல் உறுதியளிக்கப்படுகிறதா என்பதில் தங்கியுள்ளது.
உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முற்படும்போது, சட்ட ரீதியிலான
நிச்சயத்தன்மை ஒரு முக்கியமான காரணியாக அமைந்துள்ளது. இத்தகைய நிச்சயத்தன்மையின்
பெரும்பகுதி தெளிவான சொத்து உரிமைகளிலிருந்து பெறப்படுகின்றது. தொடர் அடுக்குமாடி
குடியிருப்புத் திட்டங்களில் இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை வாடிக்கையாளர்கள்
எப்போதும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத போதிலும், சிறு கட்டமைப்பிலான முழுமையான
சொத்துரிமை (Freehold ownership) மற்றும் குத்தகை உரிமை (Leasehold ownership) என்பன
இலங்கையில் நன்கு நிறுவப்பட்டக் கோட்பாடுகளாகும். சிறு கட்டமைப்பிலான முழுமையான
சொத்துரிமை என்பது பொதுவாக ஒரு சொத்தின் மீதான நிரந்தர உரிமையை வழங்குவதுடன்,
குத்தகை உரிமை என்பது நீண்டகால அபிவிருத்தி ஏற்பாடுகளில் பொதுவாக 99 ஆண்டுகள்
போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு உரிமைகளை வழங்குகின்றது.
கொழும்பு துறைமுக நகரமும் இவ்வாறானதொரு மாதிரியை பின்பற்றியபோதிலும், அதில் உள்ள
ஒரு முக்கிய சட்டப்பூர்வ வேறுபாடு, திட்டத்தின் சொத்து முதலீட்டாளர்களுக்குச் சிறு
கட்டமைப்பிலான முழுமையான சொத்துரிமையின் நன்மைகளைப் பெற வழிவகுக்கின்றது. இதன்
அடிப்படையிலுள்ள நிலமானது பிரதான குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் வைத்திருக்கப்பட்ட
போதிலும், குடியிருப்பு அடுக்குமாடி அலகுகளை முழுமையான சொத்துரிமை அடிப்படையில்
வாடிக்கையாளர்களுக்கு உரிமையாக்கம் செய்வதற்குச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. 2021
ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம்,
இக் கட்டமைப்பை வரையறுக்கின்றது. உண்மையில், இதன் பிரிவு 38 ஆனது, நிலத்தைக்
குத்தகைக்கு விடுதல் மற்றும் அந்நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி அலகுகளைக்
குத்தகைக்கு விடுதல் அல்லது முழுமையான சொத்துரிமை அடிப்படையில் உரிமையாக்கம்
செய்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அதிகாரங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
திட்ட நிறுவனத்தால் பிரதான குத்தகையின் கீழ் நிலம் வைத்திருக்கப்படும் இடங்களில், அது
தொடர்பான ஏற்பாடுகளில் ஆணைக்குழுவும் திட்ட நிறுவனமும் பங்கெடுக்கின்றன. அடிப்படை
நிலத்தின் குத்தகை உரிமைத்துவத்திற்கும் தனிப்பட்ட அடுக்குமாடியின் உரிமைத்துவத்திற்கும்
இடையிலான இவ்வேறுபாடானது, இவ் ஏற்பாட்டினைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான
அம்சமாகும். நிலத்தின் மீதான 99 ஆண்டுகாலக் குத்தகை நடைமுறையானது,
நடைமுறையிலுள்ள சட்ட விதிகளின் கீழ் ஓர் அடுக்குமாடி அலகு முழுமையான சொத்துரிமை
அடிப்படையில் உரிமையாக்கம் செய்யப்படுவதைத் தடுப்பதில்லை. இலங்கை
அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட அதிகார வரம்பின் கீழ், ஆணைக்குழு, அபிவிருத்தியாளருடன்
இணைந்து முழுமையான சொத்துரிமையை வாடிக்கையாளருக்கு உரிமையாக்கம் செய்கின்றது.
எனவே, குத்தகை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளுக்கு
முழுமையான சொத்துரிமையை வழங்குவது என்பது இலங்கையில் நடைமுறையில் உள்ள
வழக்கமான நடைமுறையாகும் என்பதுடன், இது உள்ளூர் சட்டங்களுக்கும் அமைவானதாகும்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அப்பால் அமைந்துள்ள இலங்கையின் ஏனைய அபிவிருத்தித்
திட்டங்களிலும் இவ்வாறான உரிமைத்துவ வழிமுறைகள் காணப்படுகின்றன; இருப்பினும்,
குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகள், திட்டத்திற்கு திட்டம் வேறுபடுகின்றன. வாடிக்கையாளர்கள்
தமக்கு அளிக்கப்படும் சொத்துரிமையின் தன்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதுடன்,
அதற்குரிய ஆவணங்களைத் தங்களது சட்டத்தரணிகள் மூலம் சுயாதீனமாகப் பரிசீலித்துக்
கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு உரிமைத்துவச் சட்டங்கள் குறித்துத் தெளிவான
பொதுத் தொடர்பாடலை வழங்குவதிலும், சொத்துச் சந்தை மீதான நம்பிக்கையைச்
சீர்குலைக்கக்கூடிய தவறான கருத்துக்களுக்கு விளக்கமளிப்பதிலும் நாங்கள் அதீத கவனம்
செலுத்தி வருகின்றோம்.
கொழும்பு துறைமுக நகரத்தின் வெளிநாட்டு முதலீட்டுத் தேவைகள், அதன் முதன்மைப்
பொருளாதாரப் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. நடைமுறையிலுள்ள
சட்டக் கட்டமைப்பின் கீழ், உரிய வரி விலக்குகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு
அபிவிருத்தியாளர்கள் தேவையான கட்டுமான மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து அந்நியச்
செலாவணியாகக் கொண்டு வர வேண்டும். அத்துடன், தகுதிபெறும் குடியிருப்பு அலகுகளை
உள்நாட்டு வாடிக்கையாளர்கள் இலங்கை ரூபாயிலும் கொள்வனவு செய்ய முடியும். இத்தகைய
ஏற்பாடானது, இலங்கைக்குள் அந்நிய மூலதனத்தைக் கொண்டு வருவதுடன்,
அபிவிருத்தியாளர்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் துணைபுரிகின்றது.
இவ்வாறான மூலதனப் பாய்ச்சல்கள் நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை
வலுப்படுத்துவதுடன், ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிப்பதாக
அமைகின்றன.
பாரம்பரியமாக, இலங்கையின் சொத்துச் சந்தையில் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களின்
பங்களிப்பு சுமார் 10% முதல் 15% வரை பதிவாகியுள்ளதுடன், இத்தேவையின் பெரும்பகுதி
புலம்பெயர் வெளிநாடுவாழ் இலங்கையர்களிடமிருந்து உருவாகியுள்ளது. முற்றிலும்
வெளிநாட்டினரான கொள்வனவாளர்கள் சுமார் 5% எனக் கணிப்பிடப்படும் சிறிய பங்கை
கொண்டுள்ளதுடன், அவர்களின் முதலீட்டு ஆர்வத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் முக்கிய பங்கு
வகித்துள்ளன. 2026 ஆம் ஆண்டில் முக்கிய புலம்பெயர் சந்தைகளிலிருந்து பெறப்பட்ட
இணையத்தளத் தேடல் போக்குவரத்து, 19% வரை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச
முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறை விதிக் கட்டமைப்புகளைச்
சீரமைப்பதன் மூலம் இக் கொள்வனவாளர் தளத்தை மேலும் விரிவாக்குவதற்கான தெளிவான
வாய்ப்புகள் நிலவுகின்றன.
இருப்பினும், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரைப் பொறுத்தவரை, சொத்துக்கான மதிப்புக்கு
அப்பால் பல விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலீட்டின் மீதான வருமானம்
முக்கியமானது என்ற போதிலும், அடுத்த 5, 10 அல்லது 20 ஆண்டுகளில் அந்த முதலீடு
பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவசியமாகின்றது. விசா நடைமுறைகள்,
நாட்டிற்குப் பயணம் செய்வதிலுள்ள இலகுதன்மை மற்றும் வெளிநாட்டிலிருந்து சொத்தை
நிர்வகிப்பதற்கான வசதிகள் என்பனவும் முதலீட்டுத் தீர்மானத்தில் செல்வாக்குச்
செலுத்தக்கூடியனவாகும். அத்துடன், இலங்கைக்குள் நிதியைக் கொண்டுவருவதும், ஈட்டப்பட்ட
வருமானத்தை தெளிவான மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய செயன்முறையின் மூலம்
மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதும் மற்றுமொரு முக்கியமான அம்சமாகும்.
முதலீட்டாளர்கள் கடினமான நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் அல்லது
அவசியமற்ற சிக்கலான தேவைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தால், சிலர் பிரவேசிப்பதற்கு
இலகுவான பிற சந்தைகளைத் தெரிவு செய்யக்கூடும். இத்தகைய சூழலில், கொழும்பு துறைமுக
நகரம் தனது Single Window Investment Facilitation Model மூலம் முக்கியத்துவம்பெறுகின்றது.
பொருத்தமான ஒழுங்குமுறைப் பரிசீலனைகளைப் பேணுவதுடன், நடைமுறைகளை
எளிமையாக்குவதாக உறுதியளிக்கும் இச்சேவை, முதலீட்டை ஈர்ப்பதில் ஒரு அர்த்தமுள்ள
தனித்துவமான காரணியாக அமையக்கூடும்.
விழிப்புணர்வும் மற்றுமொரு முக்கியமான காரணியாகும். வெளிநாடுகளில் சொத்துக்களை
விற்பனை செய்த எமது அனுபவத்தின்படி, இலங்கை முதலீடுகளுக்குரிய ஒரு முதன்மை இலக்கு
என்பதை முதலாவதாக அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் அடிக்கடி
உணர்கின்றோம். கொழும்பு துறைமுக நகரமானது, வெளிநாடுவாழ் இலங்கையர்களையும்
பிராந்திய முதலீட்டாளர்களையும் இலங்கை சென்றடைவதற்கான மற்றுமொரு புதிய வழியை
உருவாக்கியுள்ளது. இப்புதிய திட்டங்களின் தொடக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச
சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள், இரண்டாவது இல்லம் ஒன்றை அல்லது முதலீட்டுச் சொத்து
ஒன்றை தேடும் சாத்தியக்கூறுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை
அதிகரித்துள்ளன. அத்துடன், இந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது குறித்து
வேறு வகைகளில் பரிசீலித்திராத புதிய தரப்பினரையும் இச்சந்தையை நோக்கி ஈர்த்துள்ளன.
கொழும்பு துறைமுக நகரத்தின் நீண்டகால சாத்தியக்கூறு என்பது, முதலீட்டு வாய்ப்பின்
மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். முதலீட்டாளர்கள் பெரும்பாலும் வளர்ந்து வரும் நகர்ப்புற
மையங்களை, தற்போது அங்குள்ள நிலையை விடவும் எதிர்காலத்தில் அவை எவ்வாறான
நிலையை அடையக்கூடும் என்ற கோணத்திலேயே நோக்குகின்றனர். தொடர்ச்சியான முதலீடு,
உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் வருகை
ஆகியவற்றின் மூலம் ஒரு நகரம் பல தசாப்த காலப்பகுதியில் எவ்வாறு வளர்ச்சியடைய முடியும்
என்பதற்கு துபாய் ஒரு சிறந்த உதாரணமாகும். கொழும்பு துறைமுக நகரம் தற்போது மிகவும்
ஆரம்பக் கட்டத்தில் உள்ளதுடன், நீண்டகாலக் கோணத்தில் பரிசீலிக்கத் தயாராகவுள்ள
முதலீட்டாளர்களுக்கு, ஒரு புதிய நகர்ப்புற மற்றும் வணிக இலக்கின் அபிவிருத்தியில்
பங்கெடுப்பதற்கான சாத்தியக்கூறானது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதனுள் இலங்கைக்குக் கிடைக்கக்கூடிய பரந்த நன்மையும் அடங்கியுள்ளது. கொழும்பு துறைமுக
நகருக்கு வருகைதரும் முதலீட்டாளர்களும் குடியிருப்பாளர்களும் அதன் எல்லைகளுக்கு
அப்பாலும் நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புகளைப் பேணுவர். இது ஹோட்டல்கள்,
உணவகங்கள், வங்கிகள், போக்குவரத்துச் சேவையாளர்கள், உள்ளூர் சில்லறை
விற்பனையாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் போன்றோருக்கான சாத்தியமான தேவையினை
உருவாக்கும். வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதோடு, நுகர்வு நிலை அதிகரிப்பதன் மூலம்
மறைமுகமாக அரசாங்க வருமானமும் அதிகரிக்கும். எனவே, இதன் தாக்கம் சொத்து
விற்பனையுடன் மட்டும் சுருங்கிவிடாமல், மிகவும் பிரம்மாண்டமானதாகவும் விரிவானதாகவும்
அமைகிறது முதலீடுகள் வேகமடைந்து வரும் வேளையில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பகுதியளவிற்கு
அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களில் தங்கியிருக்கும். காணிப் பதிவகத்தை
டிஜிட்டல்மயமாக்குவதும், அணுகக்கூடிய சொத்துப் பரிவர்த்தனைத் தரவுத்தளங்களை
உருவாக்குவதும் இதற்கான முக்கிய முன்னேற்றப் படிகளாக அமையும். அத்துடன், மாறிவரும்
சந்தை நிலைமைகள், சர்வதேச நடைமுறைகள் மற்றும் குடியிருப்பாளர்களின் தேவைகளைப்
பிரதிபலிக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு விதிகளும் அவ்வப்போது மறுபரிசீலனை
செய்யப்பட வேண்டும். ஸ்திரமான வெளிநாட்டு மாதிரிகளான Strata models அடிப்படையாகக்
கொண்ட தெளிவான அடுக்குமாடி நிர்வாகச் சட்டமுறைகள், அடுக்குமாடி நிர்வாகத்தை
வலுப்படுத்துவதுடன் உரிமையாளர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் தெளிவாக
வரையறுக்கக்கூடும்.
ரியல் எஸ்டேட் துறையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட நபர் என்ற ரீதியிலும், இத்துறையின்
இயங்குநிலை பங்குதாரர் என்ற முறையிலும், இலங்கையின் ரியல் எஸ்டேட் சந்தை, தனது
எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு ஈர்க்கப்படக்கூடிய
முதன்மை இலக்காகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான சரியான தருணம் இதுவென
நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த இலக்கை அடைவதற்கு வெறும் விருப்பம் மட்டும்
போதுமானதன்று. அதற்குச் சாதகமான கொள்கை உரையாடல்கள், முற்போக்கான
சீர்திருத்தங்கள், உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டையும் அதன் சந்தை
வாய்ப்புகளையும் சந்தைப்படுத்துதல், எளிமைப்படுத்தப்பட்ட அனுமதி நடைமுறைகள் மற்றும்
முதலீட்டாளர்-நட்புச் சூழலை உருவாக்குவதற்கான ஒருங்கிணைந்த கூட்டு அர்ப்பணிப்பு என்பன
அவசியமாகின்றன.
புவியியல் அமைவிடம் எப்போதும் இலங்கையின் மிகப்பெரிய போட்டிச் சாதகங்களில் ஒன்றாக
திகழ்ந்து வந்துள்ளதுடன், அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான தருணமும்
இதுவாகும். ஒரு செழிப்பான ரியல் எஸ்டேட் துறை, முதலீடுகள், வேலைவாய்ப்புகள், அரசாங்க
வருமானம் மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் சாதகமான பக்கவிளைவுத்
தாக்கங்களை உருவாக்கி, பரந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்திவாய்ந்த வழிகோலியாகச்
செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இத்தகைய அரிய வாய்ப்பு நமக்கு முன்னால் உள்ளது,
அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான எமது ஒருங்கிணைந்த உறுதிப்பாடு இப்போது மிக
முக்கியமானதாகும்.
































