Nov 2, 2026 - 06:29 PM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய விவசாய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துமாறு கோரியும் பண்ணையாளர்களுக்கு நீதிகோரியும் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று (02) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொதுமக்கள் நீண்டநேரமாக போராட்டம் நடாத்தியபோதிலும் அங்கு அரசாங்க அதிபர் வருகைதராத அதேநேரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்தும் அரசாங்க அதிபர் வருகைதராத நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய விவசாய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தும் இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தன.
அதன் அடிப்படையில் இன்று காலை திராய்மடுவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குறித்த பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது, பஸ்களில் போராட்டக்காரர்கள் வருகைதந்த நிலையில் சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதந்த பஸ்கள் பொலிஸாரினால் மறிக்கப்பட்ட நிலையில் அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் பொலிஸாருடன் கடுமையாக வாக்குவாதங்களில் ஈடுபட்ட நிலையில் பின்னர் பஸ்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.
எனினும் பஸ்கள் மீண்டும் சுவிஸ்கிராமத்தில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகிலும் பொலிஸாரினால் பஸ்கள் மறிக்கப்பட்டு மீண்டும் செல்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரியளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பு கோசங்களை எழுப்பினார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டு பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசே ஆக்கிரமிப்பாளர்களுக்கு சலுகைகாட்டாதே, பதவிக்காக பண்ணையாளர்களை குறிவைக்காதே, மட்டக்களப்பின் பாரம்பரிய நில உரிமையில் கைவைக்காதே, மயிலத்தமடு காவல்துறையே பண்ணையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து, அரச அதிகாரிகளே பண்ணையாளர்களின் கண்ணீருக்கு பதில் சொல், நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்து, எமது கால்நடைகளை சுட்டுக்கொல்லாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
நீண்ட நேரம் போராட்டம் நடைபெற்றதுடன் இதன்போது அரசாங்க அதிபரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அதனை நிராகரித்த அரசாங்க அதிபர் ஐந்து பேரை வந்து அலுவலகத்தில் சந்திக்குமாறு கோரியிருந்தார்.இதன்போது ஊடகங்களையும் அழைத்துச்செல்வதற்கான அனுமதியை போராட்டக்காரர்கள் கோரியபோதிலும் அதுவும் அரசாங்க அதிபரினால் நிராரிக்கப்பட்டு ஐந்து பேர் மட்டும் சந்திப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இந்தபோராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரை தொடர்புகொள்ளமுயற்சித்த நிலையில் அவரை தொடர்புகொள்ளமுடியாத நிலையிருந்ததாகவும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்க அதிபரின் செயற்பாட்டினை கண்டித்தும் இதன்போது கண்ட கோசங்களும் எழுப்பபப்பட்டன.
































