Nov 7, 2026 - 10:27 PM

கொழும்பு நகரில் ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தை வினைத்திறனாகவும் துரிதமாகவும் எதிர்கொள்வதற்காக, கொழும்பு மாநகர சபையின் வழிகாட்டலில் முப்படையினர், பொலிஸார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய விசேட செயற்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் அண்மையில் ஏற்பட்ட அவசர நீர் தேங்கும் நிலைமை மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் பொருட்டு, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (7) பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்தரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று (6) கொழும்பு நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்குக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 129 மி.மீ. எனும் அளவிலான அதிகப்படியான மழைவீழ்ச்சி பதிவானமையே பிரதான காரணமென கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
தற்போதைய வடிகால் மற்றும் நீர்வடிகால் அமைப்புகள் ஒரு மணித்தியாலத்திற்கு 30 மி.மீ. மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய திறன் கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், முறையற்ற விதத்தில் கழிவுகளை அகற்றுதல் மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் காரணமாகவே நீர் செல்லும் சில வடிகால் அமைப்புகளும் கால்வாய்களும் அடைபட்டுள்ளதாக இந்தக் கலந்தரையாடலில் தெரியவந்துள்ளது.
இதனால் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றி, பாதிக்கப்பட்டவர்களைத் தகுந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், முறையற்ற விதத்தில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவதற்காகக் குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவது குறித்தும், நீர் ஒழுங்காக வெளியேறும் வகையில் அடைபட்டுள்ள வழிகளை உடனடியாகச் சுத்தப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தசார், பிரதி முதல்வர் ஹேமந்த குமார, 'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலணியின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரசல் அபோன்சு, அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
































