Nov 8, 2026 - 04:42 PM

மலையகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், இன்று (08) அதன் இரண்டு வான் கதவுகள் சுயமாக திறந்துள்ளன.
இன்று பிற்பகல் 1:16 மணி நிலவரப்படி கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைவாக, நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 438.04 மீற்றர் வரை உயர்ந்துள்ளது.
இதற்கமைய, நீர்த்தேக்கத்தின் முதலாவது வான் கதவு 0.702 மீற்றராலும், இரண்டாவது வான் கதவு 0.705 மீற்றராலும் திறந்துள்ளதுடன், அதன் ஊடாக வினாடிக்கு 159 கன மீற்றர் (159 m³/sec) நீர் மகாவலி கங்கைக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக, மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஆற்றில் இறங்குவதையோ அல்லது அதைப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறும் அதிகாரிகள் மக்களைக் கோருகின்றனர்.
நேற்று (7) இரவு 7.20 மணியளவிலும் இங்கு 2 வான் கதவுகள் தானியங்கியாகத் திறக்கப்பட்டதுடன், நள்ளிரவாகும் போது அது 4 கதவுகள் வரை அதிகரித்திருந்தன.
இருப்பினும், இன்று காலை வேளையில் அந்த அனைத்துக் கதவுகளும் மீண்டும் தானியங்கியாக மூடியதைத் தொடர்ந்து, தற்போது இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































