Nov 8, 2026 - 05:23 PM

வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் மற்றும் சுகாதாரத் துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி, எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த போராட்டத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
பல வருடங்களாகத் தீர்க்கப்படாத வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான தலையீட்டை எதிர்பார்த்து, சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என அச்சங்கம் கூறுகிறது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன், வைத்தியர்களின் போக்குவரத்து வசதிகளைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட வரிச் சலுகையுடனான வாகன இறக்குமதி உரிமங்கள் இரத்து செய்யப்பட்டமை மற்றும் கடமைச் செலவுகளை ஈடுசெய்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட மொத்த சம்பளத்திற்கும் அதிக வரி விதிக்கப்பட்டமை காரணமாக பல பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு அரச சேவையின் சம்பளத் திருத்தத்தின் போது, வைத்தியர்களின் மேலதிக கடமைக் கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒட்டுமொத்த சுகாதார சேவையையும் உள்ளடக்கிய வகையில், அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.
சுகாதார அமைச்சின் கீழ் தற்போது செயலில் உள்ள சேவையில் ஈடுபடும் வைத்தியர்களின் எண்ணிக்கை 25,000க்கும் குறைவாகவே உள்ளது என்றும், நாட்டிற்குள் குறிப்பிடத்தக்க அளவு மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டிலிருந்து சுகாதார சேவையின் பணி அளவு மற்றும் சுகாதார நிறுவனங்கள், பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், அதற்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை காரணமாக சுகாதார ஊழியர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டுள்ளதுடன், தரமான சுகாதார சேவையை பேணிச் செல்வது சவாலாக மாறியுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு உடனடியாகச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது.
































