Nov 8, 2026 - 05:27 PM

காலி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள படகு பராமரிப்புத் தளத்தில் இன்று (8) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த 7 மீன்பிடிப் படகுகள் முற்றிலும் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக காலி துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என காலிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஜி.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வளாகத்திற்குள் பயன்படுத்தப்படாத மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களை அழைத்து, அவற்றை அவ்வாறு நிறுத்தி வைத்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்து, பொலிஸ் மா அதிபருக்கு முழுமையான அறிக்கையொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட காலி துறைமுகப் பொலிஸார், இலங்கை கடற்படையின் 'தக்ஷிண' முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேச மீன்பிடிச் சமூகத்தினர் இணைந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
































