Nov 9, 2026 - 02:53 PM

கொழும்பு துறைமுக நகரம், வரி விலக்குகள் மற்றும் முதலீட்டு ஊக்கத்தொகைகளை வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட, தகுதி அடிப்படையிலான ஒரு அமைப்பின் கீழ் இயங்குகின்றது. சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) பதிவு செய்வதனால் ஒரு வணிகம் சுயமாக சலுகைகளைப் பெற உரிமை பெறாது. நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, சட்டப்பூர்வ ஒப்புதல் நடைமுறையைப் பின்பற்றும் நியமிக்கப்பட்ட “மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு” (BSIs) மட்டுமே வரி விலக்குகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
சலுகைகளின் நோக்கம்
முதலீடுகளை கவர்வதற்கு, போட்டிகரத்தன்மையை மேம்படுத்துவதற்கு மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை தூண்டுவதற்காக சர்வதேச ரீதியில் வரிச் சலுகைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் வாய்ப்பு, திறன் விருத்தி, தொழில்நுட்ப மாற்றம், அந்நியச் செலாவணி உள்வருகை மற்றும் உறுதியான பொருளாதாரச் செயற்பாடுகள் போன்ற பரந்த பொருளாதார வெளிப்பாடுகளை அவை கொண்டிருக்கும்.
ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பின் வளர்ச்சி
BSI இற்கான ஊக்கத்தொகை விதிகள், தொடர்ச்சியான ஒழுங்குமுறைகள் மூலமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரையறுக்கப்பட்ட 24 மாத காலக்கெடுவின் பின்னர் காலாவதியான 2023 ஆம் ஆண்டின் BSI ஒழுங்குமுறைகளுக்குப் பதிலாக, 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு வரி விலக்குகள் அல்லது ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்) ஒழுங்குமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்த 2025 BSI ஒழுங்குமுறைகள், BSI அந்தஸ்தை நிர்ணயித்தல் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குவது தொடர்பான தற்போதைய அளவுகோல்கள், நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளன.
பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்வதுடன் சர்வதேசப் போட்டியிடும் திறனைப் பேணி, முதலீடுகளை எளிதாக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) இந்த விதிகட்டமைப்பை நிர்வகிக்கின்றது. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் (SEZ) இயங்குவது என்பது BSI அந்தஸ்தைப் பெறுவதில் இருந்து வேறுபட்டதாகும். ஊக்கத்தொகைகளைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதுடன் சட்டப்பூர்வ நடைமுறைகள் மூலம் முறையான ஒப்புதலையும் பெற வேண்டும்.
முதலீட்டு மற்றும் பொருளாதார செயற்பாடுகள்
கொழும்பு துறைமுக நகரம், குடியிருப்பு, வர்த்தகம், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட 74 நிலப்பகுதிகளாக 269 ஹெக்டயர் கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பில் விரிந்துள்ளது. நில மீட்பு மற்றும் கிடைமட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை முதலீடு செய்யப்பட்டுள்ளன.
SEZ இனுள் 180க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதுடன், இவை 9,871 நேரடி வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதாக அமைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC) முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வரும் மூன்று முதன்மை BSI களை அடையாளப்படுத்தியுள்ளது. இதில் 125 பில்லியன் இலங்கை ரூபாய் கூட்டு நில மற்றும் அபிவிருத்திச் செலவிலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 262 மில்லியன் அமெரிக்க டொலர் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீட்டு வருகையுடனும் கட்டியெழுப்பப்படும் படகுத்துறை சார்ந்த குடியிருப்பு அபிவிருத்திகள் மற்றும் சென்ட்ரல் பார்க் அருகிலுள்ள பல்துறை பயன்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்தப் படகுத்துறை சுமார் 200 படகுகள் மற்றும் கப்பல்களை நிறுத்தி வைக்கும் வசதியைக் கொண்டிருக்கும்.
SEZ இன் பங்களிப்பு, ஈட்டப்பட்ட நேரடி அந்நிய முதலீடு, அந்நியச் செலாவணி உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கல், வணிகச் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களுடனான இணைப்பு ஆகியவற்றின் மூலமாகவே மதிப்பிடப்பட வேண்டும். வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகளின் நிதியியல் தாக்கங்களுடன் இணைத்து இந்த பொருளாதார நன்மைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தகுதி மற்றும் அந்தஸ்து நிர்ணயத்திற்கான சட்டப் அடிப்படை
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டு ஊக்கத்தொகைகள், திருத்தப்பட்டவாறான 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் மற்றும் அச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டளைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. SEZ இனுள் இயங்குவதற்கான அனுமதியையும், முதன்மை அல்லது இரண்டாம் நிலை BSI என்ற அந்தஸ்து நிர்ணயத்தையும் இச்சட்டம் தெளிவாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றது.
பிரிவு 53 இன் கீழ், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC), தகுதியுள்ள வணிகங்களை நியமிக்கப்பட்ட அரசாங்க நடைமுறையின் ஊடாக அந்தஸ்து நிர்ணயத்திற்கும் ஊக்கத்தொகைகளுக்கும் பரிந்துரை செய்கின்றது. இது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் நிறைவடைகின்றது. எனவே, வணிக வகைப்பாடு, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைகள் மற்றும் தொடர்புடைய கட்டளையின் நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாக ஊக்கத்தொகைகள் அமைந்திருப்பதுடன், SEZ இல் பதிவு செய்வதில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை.
ஆளுகை, பொறுப்புக்கூரல் மற்றும் வினைத்திறன்
2021 ஆம் ஆண்டின் சட்டம், 2026 ஆம் ஆண்டின் திருத்தம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய ஆளுகைக் கட்டமைப்பு, தகுதிக்கான அளவுகோல்கள், அந்தஸ்து நிர்ணய நடைமுறைகள், ஊக்கத்தொகை நிபந்தனைகள் மற்றும் மேற்பார்வை வழிமுறைகளை வகுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் திருத்தம் முதலீட்டு வரம்புகள், வேலைவாய்ப்பு உருவாக்க அளவுகோல்கள் மற்றும் செயல்திறன் மதிப்பீடு ஆகியவற்றிற்கான சட்டப்பூர்வ அடிப்படையைப் பலப்படுத்துகின்றது.
ஒவ்வொரு அந்தஸ்து நிர்ணயத்திலும் மற்றும் வர்த்தமானி அறிவித்தல் கட்டளையிலும் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாடுகள், நிபந்தனைகள், ஆரம்பத் திகதிகள் மற்றும் காலாவதி விதிகள் ஆகியவற்றோடு கண்காணிப்பு நடைமுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு நடைமுறைகள், வருடாந்த செலவு-நன்மை அறிக்கையிடல் அல்லது திரும்பப் பெறும் வழிமுறைகள் தொடர்பான கூற்றுகள், சட்டத்தினால் அல்லது தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களால் ஆதரிக்கப்படும் இடங்களில் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC), நிதிசார் புலனாய்வுப் பிரிவு (FIU), இலங்கை கணினி அவசர காலப் பிரிவு (Sri Lanka CERT) மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) ஆகியவற்றை உள்ளடக்கிய பல-முகவர் ஒருங்கிணைப்பு இயங்குமுறை, தேவையான இடங்களில் நிதிசார் புலனாய்வுச் சேவையின் பங்கேற்புடன், தகவல் பகிர்வு மற்றும் அடையாளம் காணப்பட்ட புதிய அபாயங்களை நிர்வகிப்பதற்கு ஆதரவளிக்கின்றது. இது ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் சிறந்த ஆளுகையைக் கொண்ட முதலீட்டுச் சூழலையும் உறுதிசெய்கின்றது.
ஒழுங்குபடுத்தல் உறுதிப்பாடு மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை
முன்கணிக்கக்கூடிய முதலீட்டுச் சூழலுக்குத் தெளிவான தகுதிக்கான அளவுகோல்கள், வரையறுக்கப்பட்ட அந்தஸ்து நிர்ணய நடைமுறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகைகளுடன் இணைக்கப்பட்ட வெளிப்படையான நிபந்தனைகள் ஆகியவை அவசியமாகின்றன. 2025 ஆம் ஆண்டின் BSI ஒழுங்குமுறைகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் (CPCEC Act) 52 மற்றும் 53 ஆம் பிரிவுகள் தற்போதைய முழுமையான விதிகட்டமைப்பை நிறுவுகின்றன.
அரச இறைவரிப் பொறுப்புக்கூரலும் முதலீட்டாளர்களின் நிச்சயத்தன்மையும் ஒன்றையொன்று நிரப்பும் கூறுகளாகும். விதிகளின் அடிப்படையிலான, காலவரையறைக்கு உட்பட்ட மற்றும் வெளிப்படையான ஓர் அமைப்பானது, முதலீட்டாளர்கள் ஊக்கத்தொகைகளின் நிபந்தனைகளையும் அதன் கால அளவையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகுப்பதுடன், சட்டப்பூர்வ தேவைகளுக்கு எதிராக இணக்கப்பாட்டை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுக்கும் அனுமதிக்கின்றது.
பொருளாதாரத் தாக்கம் மற்றும் தேசிய அனுகூலம்
கொழும்பு துறைமுக நகரம், வேலைவாய்ப்பு உருவாக்கம், பணிப்படையின் திறன் மேம்பாடு, அந்நியச் செலாவணித் திரவத்தன்மை அதிகரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பரிமாற்றம், புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வலுவான உள்நாட்டு விநியோக இணைப்பு போன்ற புலப்படக்கூடிய பொருளாதார நன்மைகளாக முதலீடுகளை இலங்கைக்கு மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தெளிவான அளவுகோல்கள், ஒழுங்குமுறைத் தெளிவு, பொறுப்புக்கூறத்தக்க மேற்பார்வை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட முதலீட்டு வசதிப்படுத்தல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (CPCEC), மூலோபாய முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் நீண்டகால தேசிய வளர்ச்சியை மேம்படுத்தும் போட்டியிடும் திறன்மிக்க வணிகச் சூழலுக்கு ஆதரவளிக்கின்றது.
சுருக்கமாகக் கூறினால், கொழும்பு துறைமுக நகரத்தின் ஊக்கத்தொகை விதிகட்டமைப்பு, முதலீட்டாளர்களுக்கான வசதிப்படுத்தலையும் அரசின் இறைவரிப் பொறுப்புக்கூரலையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விதிவிலக்குகளைத் தெளிவான அளவுகோல்கள், சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய செயல்திறன் ஆகியவற்றில் ஒன்றிணைப்பதன் மூலம், இத்தொகுதி புலப்படக்கூடிய பொருளாதார மதிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கின்றது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறை முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் தேசிய அபிவிருத்தி இலக்குகளையும் ஒருசேர வலுப்படுத்துகின்றது.
































