Nov 9, 2026 - 08:24 PM

கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமை பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இன்று (9) இரவு 7:45 அளவில் வெளியிட்ட விசேட அறிவித்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தெனியாய, தெல்லவ, தவலம, ஹினிதும மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளை அண்டி 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலையின் கீழ் தவலம, ஹினிதும, நாகொட, பத்தேகம மற்றும் திவதுர உள்ளிட்ட கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறு காணப்படுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும், எதிர்வரும் முன்னறிவிப்புகளின்படி மேலும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளபோதிலும், இதுவரை பெய்த மழை காரணமாக இந்த அபாய நிலை காணப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
































