Nov 11, 2026 - 11:54 AM

தெற்காசியாவின் முதலாவது MSC சான்றளிக்கப்பட்ட நீல நீச்சல் நண்டு மீன்பிடித் தொழில். மீன்பிடிச் சமூகங்கள், மீன்பிடித் திணைக்களம் மற்றும் தொழில்துறைப் பங்காளர்களுடன் இணைந்து 13 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாகக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், உயர்மதிப்புடைய ஏற்றுமதிச் சந்தைகளுக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது.
இலங்கையின் வடமேற்குப் பிராந்திய நீல நீச்சல் நண்டு மீன்பிடித் தொழிலானது, (blue swimming crab fishery), நிலைபேறான முறையில் பிடிக்கப்படும் கடலுணவுகளுக்கான உலகின் முன்னணி தரநிலையான, கடல் முகாமைத்துவ சபையின் (Marine Stewardship Council - MSC) மீன்பிடித் தரநிலைக்கு அமைவாகச் சான்றளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மீன்பிடித் தொழிலாக மாறியுள்ளது. அத்துடன், MSC சான்றிதழைப் பெற்ற தெற்காசியாவின் முதலாவது நீல நீச்சல் நண்டு மீன்பிடித் தொழிலும் இதுவாகும்.
MSC அமைப்பினால் இந்த மீன்பிடித் தொழிலுக்கான பொதுச் சான்றளிப்பு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 2026 நவம்பர் 4ஆம் திகதி முதல் இச்சான்றிதழ் நடைமுறைக்கு வந்தது. இது Control Union UK எனும் சுயாதீன மதிப்பீட்டு நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
வருமானத்திற்காக நண்டு பிடிப்பதை நம்பியிருக்கும் வடக்கு மற்றும் வடமேற்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கரையோரக் குடும்பங்களுக்கு இந்த அடைவானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்துடன், சான்றளிக்கப்பட்ட மற்றும் பொறுப்பான முறையில் பெறப்பட்ட கடலுணவுகளை அதிகளவில் எதிர்பார்க்கும் சர்வதேச சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உணவுச் சேவைத் துறை கொள்வனவாளர்களை அணுகுவதற்கான வாய்ப்பை இது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகிறது.
13 ஆண்டுகால அர்ப்பணிப்பின் பலன்
கலாநிதி ஸ்டீவ் கிரீச்சின் (Dr. Steve Creech) வழிகாட்டலின் கீழ் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மீன்பிடி மேம்பாட்டுத் திட்டத்தின் (Fishery Improvement Project - FIP) விளைவாகவே இந்தச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இத்திட்டம் மீன்பிடிச் சமூகங்கள், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய மீன்வள நிறுவனம் (NFI-USA), பாதுகாப்புத் துறைப் பங்காளர்கள் மற்றும் Taprobane Seafoods ஆகிய தரப்பினரை ஒன்றிணைத்தது.
இத்திட்டமானது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மீன்பிடி முகாமைத்துவத்தை வலுப்படுத்தவும், நண்டு வளம் பற்றிய விஞ்ஞான புரிதலை மேம்படுத்தவும், பொறுப்பான மீன்பிடி நடைமுறைகளை ஊக்குவிக்கவும், கரையோர வாழ்வாதாரங்களை ஆதரிக்கவும் உதவியது.
மீன்பிடித் துறை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், விஞ்ஞான ரீதியான கண்காணிப்பை ஆதரித்தல் மற்றும் சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்து அவற்றைப் பேணுவதற்கும் தேவையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) முக்கிய பங்கு வகித்தது. தொழில்துறை பங்காளரான 'CM Blue Crab (Pvt) Ltd' நிறுவனமும் இந்த கூட்டு முயற்சிக்கு பங்களிப்பை வழங்கியது.
மீனவர்கள் தாங்களாக முன்வந்து இச்செயன்முறையின் மையத்தில் இருந்தனர். நண்டுகளைத் தொடர்ந்து பிடிப்பதுடன் மட்டுமன்றி, மீன்பிடி நடைமுறைகளை மேம்படுத்துவதிலும் மீனவர்கள் பங்கேற்றனர். தரவுகளைச் சேகரிப்பதற்கு ஆதரவளித்ததுடன், மீன்பிடித் தொழிலின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு இல்லையெனில், இந்தச் சான்றிதழைப் பெற்றிருப்பது சாத்தியமாகியிருக்காது.
இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிக்கு வலுச்சேர்க்கும் சாதனை
MSC சான்றிதழானது, பொறுப்பான வகையில் அறுவடை செய்யப்படும் கடல் உணவுகளின் நம்பகமான மூலமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்துகிறது. அத்துடன் MSC சான்றளிக்கப்பட்ட நீல நீச்சல் நண்டுகளை நாடும் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை விநியோகிப்பதற்கான வாய்ப்பை Taprobane Seafoods நிறுவனத்திற்கு வழங்குகிறது. உலகளாவிய ரீதியில் வணிக அளவில் MSC சான்றளிக்கப்பட்ட நீல நீச்சல் நண்டுகளை உற்பத்தி செய்யும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களில் ஒன்றாக Taprobane Seafoods தற்போது திகழ்கிறது.
நீண்டகால முதலீடு, ஒத்துழைப்பு மற்றும் சரியான வள முகாமைத்துவம் ஆகியவற்றின் மூலம் வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள சிறிய அளவிலான மீன்பிடிச் சமூகங்கள் சர்வதேச நிலைபேறான மீன்பிடித் தரநிலைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் இந்தச் சாதனை எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்து, Taprobane Seafoods நிறுவனத்தின் தலைவரும் அதன் ஸ்தாபக பணிப்பாளருமான டிலான் பெர்னாண்டோ தெரிவிக்கையில், "இது Taprobane Seafoods நிறுவனத்திற்கு மாத்திரமல்லாது, இலங்கைக்கும், இந்தப் பயணத்தின் மையமாக விளங்கிய மீன்பிடிச் சமூகங்கள் உள்ளிட்ட, இது சாத்தியமாகும் என நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் மிகுந்த பெருமையளிக்கும் தருணமாகும். எதிர்காலத் தலைமுறையினருக்காக கடல் வளங்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் மீன்பிடிச் சமூகங்களின் வாழ்வாதாரங்களுக்கும் ஆதரவளிக்கக்கூடிய ஒரு மீன்பிடித் தொழிலைக் கட்டியெழுப்புவதற்கு, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நாம் உறுதியளித்தோம்.” என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த சாதனை மீனவர்கள், அவர்களது குடும்பங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி அயராது உழைத்த அனைத்து பங்காளர்களுக்கும் உரித்தானதாகும். அத்துடன் Taprobane Seafoods நிறுவனத்தில் பணியாற்றும் அர்ப்பணிப்புமிக்க சிறந்த பணியாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் திறமை, உறுதிப்பாடு மற்றும் புதிய எல்லைகளைத் தொடர்ந்து கடந்து சாதிப்பதற்கான ஆர்வம் ஆகியவையே எமது பல சாதனைகள் சாத்தியமாகக் காரணமாக அமைந்துள்ளன. என குறிப்பிட்ட அவர் அதற்காக அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
"சமூகங்கள், தொழில்துறை, பாதுகாப்பு நலன்கள் ஆகியன, ஒரே நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது எதைச் சாதிக்க முடியும் என்பதை MSC சான்றிதழ் நிரூபிக்கிறது. எம்மைப் பொறுத்தவரை, நிலைபேறான தன்மை என்பது வெறுமனே ஒரு சர்வதேச தரநிலையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல. எமது மீன்பிடிச் சமூகங்கள் எதிர்காலத் தலைமுறைகளிலும் தொடர்ந்து செழித்து வாழ்வதை உறுதிப்படுத்துவதாகும்." என்றார்.
இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சம்பத் பத்மவம்ச தெரிவிக்கையில், " இலங்கையின் நீல நீச்சல் நண்டு மீன்பிடித் தொழிலுக்கான மதிப்புமிக்க MSC சான்றிதழைப் பெற்றதற்காக Taprobane Seafoods மற்றும் இதில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லானது எமது நாட்டிற்கு ஒரு மகத்தான சாதனையாகும். அத்துடன் நிலைபேறான மீன்பிடி, பொறுப்பான வள முகாமைத்துவம் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பான தரநிலைகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பின் சக்திவாய்ந்த நிரூபணமாகும்.” என்றார்.
"இது வெறுமனே ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு மீன்பிடித் தொழிலுக்கோ கிடைத்த வெற்றி அல்ல; இது இலங்கையின் முழு கடல் உணவுத் துறைக்கும் ஒரு பெருமையான தருணம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நாட்டின் ஏனைய மீன்பிடித் தொழில்களும் மிக உயர்ந்த சர்வதேச நிலைபேறான மீன்பிடித் தரநிலைகளைப் பின்பற்றுவதற்கான ஒரு உத்வேகமாகும்" என்றார்.
தொழில்துறையில் தொடர்ச்சியான முன்னோடிச் சாதனைகள்
இலங்கையின் முதலாவது MSC சான்றிதழானது Taprobane Seafoods நிறுவனத்தின் தொடர்ச்சியான, முதலாவது சாதனைகளின் வரிசையில் புதிய சேர்க்கையாகும். இந்நிறுவனம் இலங்கையின் முதலாவது பதப்படுத்தப்பட்ட நண்டிறைச்சி உற்பத்திச் செயற்பாட்டை முன்னோடியாக அறிமுகப்படுத்தியது; ஆசியாவின் முதலாவது சூழலியல் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட நீல நீச்சல் நண்டுக்கான அங்கீகாரத்தைப் பெற்றது; ' வனாமி' (Vannamei) இறால் வளர்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது; நான்கு நட்சத்திர Best Aquaculture Practices (BAP) சான்றிதழைப் பெற்றது; இலங்கையின் முதலாவது 'Aquaculture Stewardship Council' (ASC) சான்றளிக்கப்பட்ட இறால் பண்ணையை உருவாக்கியுள்ளது.
Taprobane Seafoods (Pvt) Ltd பற்றி
Taprobane Seafoods (தப்ரோபேன் சீஃபூட்ஸ்) ஆனது சர்வதேச சந்தைகளுக்கான நீல நண்டு மற்றும் இறால் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையின் முன்னணி கடலுணவுப் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக் குழுமங்களில் ஒன்றாகும். 15 பதப்படுத்தும் நிலையங்கள், 600 ஏக்கருக்கும் அதிகமான இறால் பண்ணைகள், 3,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், இக்குழுமம் இலங்கை முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கரையோர மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Marine Stewardship Council பற்றி
MSC என்பது அளவுக்கதிக மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவரவும், உலகம் முழுவதும் நிலைபேறான மீன்பிடித்தலை ஊக்குவிக்கவுமென இயங்கும் ஒரு சர்வதேச, சுயாதீன, இலாப நோக்கற்ற அமைப்பாகும். இச்சான்றிதழைப் பெற விரும்பும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர், மீன் வளங்களின் நிலை, மீன்பிடியின் சுற்றுச்சூழல் தாக்கம், மீன்பிடி முகாமைத்துவத்தின் செயல்திறன் செயல்திறன் ஆகிய மூன்று கோட்பாடுகள் தொடர்பில் இறுக்கமான சுயாதீன விஞ்ஞான மதிப்பீட்டிற்கு உட்படுகின்றன. சான்றளிக்கப்பட்ட நீர்வளர்ப்புத் தொழில்கள் தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியான வகையில் கண்காணிக்கப்பட்டு மீளவும் மதிப்பிடப்படுகின்றன.
































