Nov 11, 2026 - 10:37 AM

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக சுமார் 7.02 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற வர்த்தகர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், நேற்று (10) மாலை விமான நிலைய சுங்கத் திணைக்களம் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் டுபாயில் இருந்து மாலை 5.50 மணியளவில் விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 234 அட்டைப் பெட்டிகளில் (Cartons) இருந்த மொத்தம் 46,800 சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அறிவிப்பதற்கு பொருட்கள் எதுவும் இல்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பசுமை வழி ஊடாக, இந்த சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்காமல் எடுத்துச் செல்ல அவர் முயன்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சுங்கப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































