Nov 11, 2026 - 09:38 AM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 14 ஆம் கிராமமான கனேசபுரம், விலினையடிச் சந்தியில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், மண்டூர் 2 ஆம் குறிச்சியைச் சேர்ந்த 60 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கனேசபுரத்தைச் சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில், மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளிப் பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தைப் போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமரர் ஊர்தி மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
































