Nov 16, 2026 - 04:38 PM

கொமர்ஷல் வங்கிக் குழுமமானது 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தனது வர்த்தக அளவுகளிலும் இருப்புநிலைக் குறிப்பிலும் சீரான வளர்ச்சியைப் பதிவுசெய்து, ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களையும் தனது வழக்கமான வலுவான நிதி நிலையுடன் நிறைவு செய்துள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியையும் ஆறு துணை நிறுவனங்களையும் உள்ளடக்கிய இக்குழுமம், செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதிக்கு 318.79 பில்லியன் ரூபாவை மொத்த வருமானமாகப் பதிவு செய்துள்ளது. இது 18.87% அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில் வட்டி வருமானம் 20.52% அதிகரித்து 266.98 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. கடன் புத்தகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி காரணமாக, மூன்றாவது காலாண்டில் மட்டும் மொத்த வருமானம் 20.01% அதிகரித்து 109.63 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
வட்டி வீதங்களின் உயர்வு மற்றும் வைப்புகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஒன்பது மாத காலப்பகுதிக்கான வட்டிச் செலவு 23.62% அதிகரித்து 145.92 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, குழுமம் ஒன்பது மாத காலப்பகுதிக்கு 121.06 பில்லியன் ரூபாவையும், மூன்றாவது காலாண்டிற்கு 41.36 பில்லியன் ரூபாவையும் நிகர வட்டி வருமானமாகப் பதிவு செய்துள்ளது. இவை முறையே 16.98% மற்றும் 19.30% வளர்ச்சியைக் காட்டுகின்றன.
ஒன்பது மாத காலத்திற்கான மொத்த செயற்பாட்டு வருமானம் 14.37% அதிகரித்து 160.33 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடன் குறைபாட்டுக் கட்டணங்கள் மற்றும் ஏனைய இழப்புகளுக்கான ஒதுக்கீடுகளை 17.84% அதிகரித்து 16.57 பில்லியன் ரூபாவாக உயர்த்தியுள்ளதாகக் குழுமம் அறிவித்துள்ளது. இதனால் இக்காலப்பகுதிக்கான நிகர செயற்பாட்டு வருமானம் 13.98% முன்னேற்றத்துடன் 143.76 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
ஊழியர் செலவீனங்களின் உயர்வு, தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் அது சார்ந்த செலவுகள் காரணமாக ஒன்பது மாத காலப்பகுதிக்கான செயற்பாட்டுச் செலவுகள் 19.94% அதிகரித்து 47.27 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இதற்கமைய, நிதியியல் சேவைகள் மீதான வரிகளுக்கு முந்தைய செயற்பாட்டு இலாபம் 11.27% வளர்ச்சியுடன் 96.49 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
இக்காலப்பகுதியில் நிதியியல் சேவைகள் மீதான வரிகள் 25.35% அதிகரித்து 16.75 பில்லியன் ரூபாவாக உயர்ந்த நிலையில், குழுமம் வருமான வரிக்கு முந்தைய இலாபமாக 79.74 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளது. இது 8.71% வளர்ச்சியாகும். இக்காலப்பகுதிக்கான வருமான வரி 8.86% அதிகரித்து 27.57 பில்லியன் ரூபாவாக உயர்ந்ததன் விளைவாக, குழுமத்தின் ஒன்பது மாத காலப்பகுதிக்கான வரிகளுக்குப் பிந்தைய நிகர இலாபம் 8.63% வளர்ச்சியுடன் 52.16 பில்லியன் ரூபாவாக அமைந்தது.
'அதிகரித்து வரும் வட்டி வீதச் சூழலுக்கு மத்தியிலும், வங்கியியல் துறை சந்தைச் சூழல்சார் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் பரவலாக சீரான நிலையில் இருந்தது,' என்று கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் கருத்துத் தெரிவித்தார். 'இந்தப் பின்னணியில், எங்களது முக்கிய நிதிச் சுட்டெண்களில் சீரான செயல்திறனை நாங்கள் தக்கவைத்துள்ளோம். நெகிழ்திறன் மற்றும் நிலையான வளர்ச்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில், விரைவாகவும் மூலோபாய ரீதியாகவும் பதிலளிப்பதை உறுதி செய்வதற்காக, உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களையும், இலங்கை வர்த்தகத்தின் சில துறைகளில் அவற்றின் தாக்கங்களையும் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்' என்று அவர் மேலும் கூறினார்.
மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒன்பது மாதங்களில் வங்கியும் குழுமமும் வைப்புகள் மற்றும் கடன் வழங்கல்கள் இரண்டிலும் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க சுட்டிக்காட்டினார். இது வங்கியின் ஸ்திரத்தன்மை மற்றும் நெகிழ்திறனுக்கான தெளிவான சான்றாகும். 'குழுமம் தனது முதன்மை வங்கியியல் செயற்பாடுகள், அனைத்து பங்குதாரர் பிரிவினருக்குமான பொறுப்புகள் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கான கடப்பாடுகள் ஆகியவற்றில் தனது அசையாத கவனத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த ஒன்பது மாத கால செயல்திறனானது, சவாலான காலங்களிலும் சரியான பாதையில் பயணிக்கக்கூடிய எமது திறனைப் பிரதிபலிக்கிறது,' என்று அவர் குறிப்பிட்டார்.
குழுமத்தின் மொத்தக் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ஒன்பது மாத காலப்பகுதியில் மாதத்திற்குச் சராசரியாக 38.71 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 16.70% அல்லது 348.37 பில்லியன் ரூபாவால் வளர்ச்சியடைந்துள்ளன. இதன்படி 2026 செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் வங்கியின் மொத்தக் கடன் புத்தகம் 2.43 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. இது கடன் வழங்குநராக வங்கியின் பங்களிப்பின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த 12 மாத காலப்பகுதியில் கடன் புத்தகத்தின் வளர்ச்சி மாதத்திற்கு சராசரியாக 43.91 பில்லியன் ரூபா வீதம் 526.88 பில்லியன் ரூபாவாக (27.63%) பதிவாகியுள்ளது.
அதேவேளை, குழும மட்டத்திலான வைப்புகள் 2026 செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் மாதத்திற்குச் சராசரியாக 46.55 பில்லியன் ரூபா என்ற கணக்கில் 418.98 பில்லியன் ரூபாவால் (15.52%) அதிகரித்து 3.12 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளன. கடந்த 12 மாத காலப்பகுதியில் வைப்புகள் மாதத்திற்கு சராசரியாக 44.19 பில்லியன் ரூபா வீதம் 530.30 பில்லியன் ரூபாவால் (20.49%) குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ளன. தனிப்பட்ட ரீதியில், இக்காலாண்டில் கொமர்ஷல் வங்கியின் வைப்புகள் முதன்முறையாக 3 டிரில்லியன் ரூபா என்ற மைல்கல்லைக் கடந்துள்ளன.
குழுமத்தின் மொத்த சொத்துக்கள் 2025 டிசம்பர் மாதத்திலிருந்து 14.68% அல்லது 496.08 பில்லியன் ரூபாவால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து 2026 செப்டம்பர் 30 நிலவரப்படி 3.87 டிரில்லியன் ரூபாவை எட்டியுள்ளன. அத்துடன் கடந்த 12 மாத காலப்பகுதியில் 642.26 பில்லியன் ரூபாவால் (19.87%) சுவாரஸ்யமான வளர்ச்சியைக் காட்டியுள்ளன. இது மதிப்பாய்வு செய்யப்பட்ட ஒன்பது மாதங்களில் மாதத்திற்குச் சராசரியாக 55.12 பில்லியன் ரூபா வளர்ச்சியையும், கடந்த ஆண்டில் மாதத்திற்குச் சராசரியாக 53.52 பில்லியன் ரூபா வளர்ச்சியையும் குறிக்கிறது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைந்துள்ள 274 கிளைகள் மற்றும் தன்னியக்க இயந்திரங்களின் விரிவான வலையமைப்புடன் செயற்பட்டுவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

































