Nov 16, 2026 - 04:42 PM

கொகா-கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் (Coca-Cola Beverages Sri Lanka Limited), தனது விற்பனைக் குழுவின் சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைச் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டிற்கான SLIM தேசிய விற்பனை விருதுகள் விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இதில் இரண்டு வெண்கல விருதுகளும், நான்கு தகுதிச் சான்றிதழ் விருதுகளும் அடங்கும். இலங்கையின் போட்டித்தன்மை மிக்க FMCG மற்றும் நவீன வர்த்தகத் துறைகளில் நிறுவனத்தின் வணிக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், சந்தை இருப்பை வலுப்படுத்துவதிலும் விற்பனைக் குழுவினர் ஆற்றிய பங்களிப்பையும் திறமையையும் இந்த வெற்றி பறைசாற்றுகிறது.
இவ்விருதுகளில் கயான் மிந்திக மற்றும் சாமர பெரேரா ஆகியோர் வெண்கல விருதுகளை வென்றுள்ளதுடன், அசங்க பிரதீப், இஷான் சாலிந்த, உமேந்திர அபேநாயக்க மற்றும் அலஸ்டயர் சென் ஆகியோர் சிறப்புத் தகுதிச் சான்றிதழ் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். சில்லறை விற்பனை, விற்பனைச் செயலாக்கம், பிராந்திய முகாமைத்துவம் மற்றும் தேசிய விற்பனைத் தலைமைத்துவம் ஆகிய முக்கியப் பிரிவுகளில் காட்டிய சிறந்த திறமைக்காக இவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் விற்பனை நிபுணர்களுடன் போட்டியிட்டு கொகா-கோலா நிறுவனத்தின் விற்பனைப் குழுவினர் தங்களின் திறமைகளைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த புதிய அங்கீகாரம் SLIM தேசிய விற்பனை விருதுகளுடனான அவர்களின் நீண்டகாலத் தொடர்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து கொகா-கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் மரியோ பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு வெற்றிகரமான வணிகத்திற்கு பின்னாலும், அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிய சரியான புரிதலின் மூலம் எமது இலக்குகளுக்கு உயிரூட்டும் ஒரு திறமையான குழு உள்ளது. எமது விற்பனை நிபுணர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த சான்றே இந்த விருதுகளாகும். அவர்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவை வலுப்படுத்தவும், எமது தயாரிப்புகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யவும் அயராது உழைக்கிறார்கள். கொகா-கோலா நிறுவனத்தில், எமது ஊழியர்களை அங்கீகரித்து முதலீடு செய்வதையும், தொழில்துறையில் அவர்கள் சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் பெரிதும் நம்புகிறோம். விருது வென்ற எமது வெற்றியாளர்களைக் குறித்து நாங்கள் பெருமையடைவதுடன், அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் மேலும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறோம்.” என்றார்.
இந்த 6 விருதுகளானது, விற்பனைத் திறமைகளை வளர்ப்பதற்கும், தொழில்முறைச் சிறப்பை ஊக்கப்படுத்துவதற்கும், நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிக்கும் உயர் செயல்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கும் கொகா-கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

































