Nov 17, 2026 - 06:47 PM

Vietjet, வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2026 இல், “சிறந்த முதலீட்டாளர் தொடர்பாடல் விமான சேவை – சர்வதேசம் 2026” மற்றும் “சிறந்த கூட்டாண்மை நிதி மூலோபாயம் – சர்வதேசம் 2026” ஆகிய இரு உயர் விருதுகளை வென்றுள்ளது. கொழும்பு மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய விமானச் சேவைகளின் தொடர்ச்சியுடன் தெற்காசியாவில் Vietjet தனது விரிவாக்கத்தைத் துரிதப்படுத்தி வரும் நிலையில், முதலீட்டாளர் வெளிப்படுத்தல்களை மேம்படுத்துவதற்கும் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நிதியளிப்பு மூலோபாயத்தை உருவாக்குவதற்கும் அவ்விமான நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன.
தனது Hybrid airline வியாபார மாதிரியின் ஒரு பகுதியாக, Vietjet சர்வதேச நிதிப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன், தனது விமானத் தொகுதியை விரிவுபடுத்துவதற்கும், விமானப் பயண வலையமைப்பை விஸ்தரிப்பதற்கும் மற்றும் அது சார்ந்த விமானப் போக்குவரத்து வணிகங்களில் முதலீடு செய்வதற்கும் பல்வேறுபட்ட நிதியளிப்புக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றது. அவ்விமான நிறுவனத்தின் பிரத்தியேக முதலீட்டாளர் தொடர்பாடல் குழு, வணிகப் புதுப்பிப்புகள், மூலோபாய முன்னுரிமைகள், நிதி அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் மற்றும் சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை அறிக்கைகளை வியட்நாமிய மற்றும் ஆங்கில மொழிகளில் விமான நிறுவனத்தின் முதலீட்டாளர் தொடர்பாடல் இணையத்தளத்தில் வெளியிடுகின்றது.
Vietjet இன் பணிப்பாளர் சபையின் உப தலைவி மற்றும் குழுமத்தின் பிரதம நிதி அதிகாரி மெடம் ஹோ கொக் யென் புஹொங் (Madam Ho Ngoc Yen Phuong) கருத்துத் தெரிவிக்கையில், “எமது விமானத் தொகுதியில் முதலீடு செய்வதற்கு அல்லது எமது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் நீண்டகால அர்ப்பணிப்பாகும். நாம் மூலதனத்தைத் திரட்டும் மற்றும் ஒதுக்கீடு செய்யும் விதத்தைக் குழுமத்தின் வளர்ச்சித் திட்டங்களுடன் ஒத்திசைப்பதுடன், எமது முன்னுரிமைகள் மற்றும் அவற்றை நாம் எவ்வாறு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்து முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலைப் பேணுகின்றோம். சர்வதேச நிதிப் பங்காளர்களுடனான எமது உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலம், எமது Hybrid airline மாதிரியின் கீழ் Vietjet இன் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும், சர்வதேச வழித்தடங்களில் பயணிகளுக்கு நாம் வழங்கும் சேவையை மேம்படுத்தவும் நாம் இலக்கு வைத்துள்ளோம்.” என்றார்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் Vietjet, 74.385 டிரில்லியன் வியட்நாமிய டோங் (VND) (சுமார் 2.88 பில்லியன் அமெரிக்க டொலர்) ஒருங்கிணைந்த வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது வருடாந்த அடிப்படையில் 41% வளர்ச்சி என்பதுடன், முழு ஆண்டு இலக்கில் 86% இற்குச் சமமானதாகும். வரிக்குப் பிந்திய ஒருங்கிணைந்த இலாபம் 1.721 டிரில்லியன் வியட்நாமிய டோங் (சுமார் 66.7 மில்லியன் அமெரிக்க டொலர்) ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது அதன் முழு ஆண்டு இலக்கில் 82% ஆகும். விமான நிறுவனம் 111,700 விமானப் பயணங்கள் மூலம் 20.7 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன், 176 சர்வதேச வழித்தடங்கள் மற்றும் 47 உள்நாட்டு வழித்தடங்கள் உள்ளடங்கலாக 223 வழித்தடங்களில் சேவைகளை வழங்கியுள்ளது.
தெற்காசியாவில் Vietjet தனது பிரசன்னத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில் இவ்விருது அங்கீகாரம் கிடைத்துள்ளது. கொழும்பு மற்றும் Ho Chi Minh City ஆகியவற்றுக்கிடையிலான விமானச் சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் இயங்கி வரும் நிலையில், புதிய கொழும்பு–மாலைதீவு விமானச் சேவை 2026 டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2027 பெப்ரவரி மாதத்தில், கொழும்பு மற்றும் மாலைதீவுகளை, ஹனோய் நகருடன் இணைக்கும் மற்றுமொரு புதிய வழித்தடத்தை Vietjet ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் இலங்கையிலுள்ள பயணிகள் வியட்நாம் மற்றும் அதற்கப்பாலுள்ள நாடுகளைச் சென்றடைவதற்கு மேலதிக பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் வர்த்தகம் மற்றும் நிதித் துறைகளில் காணப்படும் சாதனைகள் மற்றும் புத்தாக்கங்களை அங்கீகரிக்கும் முகமாக, வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் சஞ்சிகையினால் வேர்ள்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் வருடாந்தம் வழங்கப்படுகின்றன.
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் 'சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம்' எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

































