Nov 17, 2026 - 07:27 PM

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிலவக்கூடிய எரிவாயு தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், லிட்ரோ கேஸ் நிறுவனம் 45,000 மெட்ரிக் டன் எரிவாயுத் தொகைக்கு முன்கூட்டியே கொள்வனவு கட்டளை செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நவம்பர் மாதத் தேவைக்காக லிட்ரோ நிறுவனத்தால் 44,000 மெட்ரிக் டன் எரிவாயுக்கு கொள்வனவு கட்டளை செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 23,400 மெட்ரிக் டன் தற்போது நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது.
மேலும் 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்று நாளை (18) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
பொதுமக்களின் எரிவாயு தேவையைச் சீராகப் பூர்த்தி செய்யும் நோக்கில், வழமையாகச் சந்தைக்கு விநியோகிக்கப்படும் 32,000 மெட்ரிக் டன் அளவானது தற்போது 45,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 800,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் நாட்டில் எந்தவொரு எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாதவாறு முறையான நேர அட்டவணைப்படி பொதுமக்களுக்குத் தேவையான எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

































