Nov 17, 2026 - 09:05 PM

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்குப் பதக்கங்களை வென்று கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'மிஷன் ஒலிம்பிக்' (Mission Olympic) திட்டத்துக்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்களை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று (17) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"வரவு செலவுத் திட்டம்) ஊடாக முன்வைக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் அந்த ஆண்டிற்குள் மாத்திரம் செலவிட்டு முடிக்கப்படுவதில்லை. வரவு செலவுத் திட்டம் என்பது வெறும் இலக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணம் மாத்திரமல்ல.
ஒரு அரசாங்கத்தின் நிதிக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் எதிர்காலக் கண்ணோட்டமும் அதன் ஊடாகவே பிரதிபலிக்கப்படுகிறது.
குறித்த அந்தப் பதக்க ஒதுக்கீடு தொடர்பான வரியை மாத்திரம் பார்க்காமல், முழுமையான வரவு செலவுத் திட்ட உரையை வாசித்தால் இது புரியும்.
உதாரணமாக, ஆரம்ப சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிர்மாணிப்பதற்காக 17,400 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த முழுத் தொகையும் அடுத்த ஆண்டிலேயே ஒரே தடவையில் ஒதுக்கப்படுவதில்லை; அதில் 3,600 மில்லியன் ரூபாவே அடுத்த ஆண்டுக்காக வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல நீண்டகாலத் திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன.
உதாரணமாக, தேசிய இருதய மையத்தை நிர்மாணிப்பதற்கான மொத்தச் செலவு 12,000 மில்லியன் ரூபாவாகும். ஆனால், அந்தத் தொகையை முழுவதையும் ஒரே ஆண்டில் செலவிட முடியாது.
இதனை விளையாட்டுத் துறைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால், 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கு வெறும் சில மாதங்களுக்கு முன்பு, அதாவது 2027 நவம்பரில், 100 மில்லியன் ரூபாவை வழங்குவதாகக் கூறி, நாம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியும் என்று கருத முடியாது.
உண்மையில், இதற்குத் திட்டமிடுவதே தற்போதும் சற்று தாமதமான ஒரு செயற்பாடாகும்.
எங்களிடம் 'மிஷன் ஒலிம்பிக்' என்ற சிறப்புக் குறிக்கோள் திட்டம் ஒன்று உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு உயரிய பதக்கமொன்றை ஈட்டித் தரும் தீவிர முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த நீண்டகால இலக்கை வெற்றிகரமாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 'மிஷன் ஒலிம்பிக்' திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

































