Nov 17, 2026 - 10:30 PM

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், தங்காலையைச் சேர்ந்த 'லாரா' என்றழைக்கப்படும் இந்திக பிரசாத் என்பவருக்குச் சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு சொத்துகளை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் போது, இந்தச் சொத்துகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதியைச் சம்பந்தப்பட்ட நபரின் சட்டபூர்வமான வருமான மூலங்களுடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருத்தப்பட்ட பணத்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ் இந்த முடக்கல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, தங்காலை - தன்கெட்டிய பகுதியில் 18 பேர்ச்சஸ் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி வீடு, அதே பகுதியில் கட்டடத்துடன் கூடிய மற்றொரு காணி, பொலன்மாருவ பகுதியில் இரண்டு கட்டடங்களைக் கொண்ட 19.20 பேர்ச்சஸ் சொத்து மற்றும் வல்கம்பிட்டிய பகுதியில் 37.25 பேர்ச்சஸ் காணி ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கல் உத்தரவுகள் இன்று (17) முதல் அமுலுக்கு வந்ததுடன், இது 14 வேலை நாட்களுக்குச் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

































