Nov 21, 2026 - 03:25 PM

சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக வாக்குறுதியளித்துப் பணம் திரட்டி, அப்பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மூன்று பணிப்பாளர்களில் இருவர் நேற்று (20) இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அந்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் கொஹுவல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள குறித்த இரண்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடியின் பெறுமதி சுமார் 4 பில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் ஆலோசனை மற்றும் பணிப்புரைக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
































