Nov 21, 2026 - 07:04 PM

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படாமை குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (23) அனைத்துக் கிளைச் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் இக்கிளைச் சங்கக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அக்காலப்பகுதியில் அவசர சிகிச்சைச் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து நிறைவேற்றுச் சபை தீர்மானிக்கும் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் தமக்குரிய கொடுப்பனவுகளில் கணிசமான பகுதியைத் தியாகம் செய்து 4.4 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் சேமித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொழில் வல்லுநர்கள் என்ற வகையில் வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அநீதிக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகச் சாதகமான நிவாரணமொன்று கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
ஆனால், கடந்த நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நாடளாவிய ரீதியிலுள்ள ஒட்டுமொத்த வைத்திய சமூகத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, இந்நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகக் கடந்த 19ஆம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், இதன்போது வைத்திய சமூகத்திற்காக 5 பிரதான கோரிக்கைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அவை பின்வருமாறு:
2018ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான DAT கொடுப்பனவை உடனடியாக வழங்குதல்.
DAT கொடுப்பனவு மற்றும் மேலதிக கடமை / விடுமுறை தினக் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு அளித்தல்.
இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள மேலதிக கடமை மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளின் 1/3 பங்கை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
தகுதி பெற்றுள்ள வைத்தியர்களை 22/99 சுற்றுநிருபத்திற்கு அமையப் போக்குவரத்து வசதிகளுக்காக உள்வாங்குதல்.
வைத்தியர்களின் போக்குவரத்து வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வரிச் சலுகையுடனான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை நடைமுறைப்படுத்துதல்.
மேலும், எதிர்வரும் வாரத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை எதிர்பார்ப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், எதிர்வரும் வாரத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்களையும் இது குறித்துத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































