Nov 21, 2026 - 08:49 PM

ஊவா மாகாணத்திலுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களுக்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 28 உத்தியோகபூர்வ இணையத்தளங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் செயலிழந்திருந்த இணையத்தளங்களுக்குப் பதிலாக, இந்தப் புதிய இணையத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக எவ்வித அரசாங்க நிதியையும் செலவிடாமல், ஊவா மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளின் தன்னார்வப் பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவின் மூலம் இவ் இணையத்தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றங்களை நடத்திச் செல்வதில் தற்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியம் குறித்துக் கவனம் செலுத்தி, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் மாதிரிச் சபைகள் உள்ளடங்கலான செயன்முறைச் செயற்பாடுகள், நிபுணத்துவக் கலந்துரையாடல்கள், விரிவுரைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட விசேட வேலைத்திட்டத் தொடரொன்றை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடத்தி வருகின்றது.
இதன் கீழ், ஊவா மாகாணத்திற்கான வேலைத்திட்டம் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர தலைமையில் நேற்றைய தினம் (20) நடைபெற்றதுடன், இதன்போதே இவ் இணையத்தளங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இப்பயிற்சிப் பட்டறைத் தொடரின் போது சபைக் கூட்டங்கள் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயன்முறை, சபைத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், குழுக்களின் செயற்பாடுகள், பெறுகைச் செயன்முறையின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் அத்துடன் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை நடைமுறையில் பயன்படுத்துவது தொடர்பான தெளிவை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
































